இப்படித்தான் இருக்க வேண்டும்

15/02/2015 21:33

 

தவறு செய்யாத மனிதர்களே இன்றைய உலகில் இல்லை என்கிற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி என்றால், யார் நம்மை வழிநடத்த இருக்கிறார்கள்? தவறு செய்திருந்தாலும் திருந்தி வாழ்பவர்களை இந்த உலகம் மதிக்கிறது. ஏனெனில், பெரும்பாலோர் தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ள இயலாமல் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, தங்களை உறுதியான மனநிலையோடு மாற்றிக் கொண்டவர்களை மதித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் எனக் கேட்க ஆரம்பிக்கிறார்கள்.

 மனிதனின் பெரும்பாலான குணாதிசயங்களில் முக்கியமானது பிறர் அறிவுரை சொல்வதை விரும்பாதது. ஏனெனில், நம்மைவிட அறிவுரை சொல்பவருக்கு என்று தகுதிகள் இருக்க வேண்டும் என்று விரும்புவதுதான் காரணம். அதனால், உடன் இருப்பவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்க மறுக்கிறோம். இந்த உலகிலேயே இலவசமாகக் கிடைக்கும் ஒன்று இந்த அறிவுரைதான்.

 இன்றைய மனிதர்களில் பெரும்பாலோர் விரும்புவது பாராட்டுகளையும் புகழையும்தான். காரணம், இதன் மூலம்தான் சமுதாயம் அங்கீகரிக்கிறது என்கிற உணர்வுதான். அதன்மூலம் தான் செய்யும் செயல் சமூகத்தில் வெளிப்பட்டு பிறருக்கும் தெரியவரும். இதன்மூலம் நமது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுகிறது என்பதுதான் இந்த நம்பிக்கையின் அடிப்படை.

 அதனால்தான் தற்போதைய சமுதாயத்தில் எங்கு பார்த்தாலும் பாராட்டுகளும், விருதுகளும் நடைபெறுகின்றன.

 அதுவும் ஒருவர் தான் வாழும் காலத்திலேயே பாராட்டப்படுதல், கெüரவிக்கப்படுதல் என்பது மிகவும் முக்கியம். அதைவிடுத்து அவர் இவ்வுலக வாழ்க்கையை முடித்துச் சென்ற பின்பு அவர் பெயரைச் சொல்லியோ, அவர் படத்தை வைத்தோ வாய்மணக்க, மனம் குளிர பாராட்டி என்ன பயன்? அப்படி ஒருவரை நாம் பாராட்டும்போது அவரின் நிலை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல பாராட்டுதல் இன்னும் சிறப்பாக இருக்கும்.

 படிக்கும் காலத்தில் மாணவர்கள் எதற்குப் படிக்கிறோம் என்கிற நோக்கமற்று படிக்கிறார்கள். ஒருவேளை இப்படி நோக்கமற்ற படிப்பாக இருந்தாலும், நல்ல ஒழுக்கமுள்ள எந்தச் சூழலிலும் நேர்மையாக, நியாயமாக, மனிதநேயமாக நடப்பவர்களாக வளர்க்க வேண்டும் என்பதுதான் காரணம். அடிப்படையில் குழந்தைகள் அனைவரும் நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள். சூழ்நிலையும் வளர்ப்புமே அவர்களை உருவாக்குகிறது. நல்ல சூழலும் வளர்ப்பும் ஒரு பண்புள்ள மனிதனை உருவாக்குகிறது. இல்லையேல், இதற்கு நேர்மாறான விளைவை உண்டாக்குகிறது.

 உலகோர் உயிர்வாழ உணவுப் பயிர்செய்யும் உழவர், நல்ல குடிமக்களை உருவாக்கும் நல்லாசிரியர், நேர்மையும் திறமையும் நிறைந்த ஆட்சியர், கடமையுணர்வோடு மக்களைக் காக்கும் காவலர், நீதிக்கும் நேர்மைக்கும் துணைபுரியும் வழக்கறிஞர்-நீதிபதி, மக்கள் நலனில் அக்கறையுள்ள மனிதநேயமுள்ள மருத்துவர், திறமையோடு தீமையற்ற தொழில்புரியும் முதலாளி, கடின உழைப்புடன் நேர்மையாய் பணிபுரியும் தொழிலாளி, மக்களின் குறை தீர்க்கும் பிரதிநிதியாய் நல்லாட்சி செய்யும் அரசியல்வாதி, எந்தத் தொழில் செய்திடினும் உண்மை, நேர்மை, வாய்மை கடைப்பிடித்தும் எந்த வாய்ப்பு அமையாவிடினும் யாருக்கும் நன்மை தராவிடினும் பரவாயில்லை - குறைந்தபட்சம் தீமை தராமல் வாழ்வோம்.

 மேற்கண்ட சிந்தனையை இந்தக் கால குழந்தைகளிடம் சொல்லி வளர்த்தாலே போதும். எதிர்காலம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அதிலிருந்து கோர்வையாக உருவான தொடர்தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

 பள்ளியில் கற்கும் கல்வி மனிதனுக்கு அறிவை மட்டுமே கொடுத்தால் போதாது. பண்பை, பாசத்தை, நேசத்தை, மனித நேயத்தை, அன்பைக் கற்றுக் கொடுப்பதாய் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் லஞ்சம், ஊழல் பெருகாமல் நிர்வாகம் நேர்மையாக நடந்து நமது நாடும் முன்னுதாரணமாகத் திகழும். எனவே, கல்வி முறை எப்படி என்பதுதான் மனிதனுக்கு அடிப்படை.

 கல்வி அறிவு இல்லாதவர்கள்தான் நேர்மையாக நடப்பார்கள் என்பது போன்ற சிந்தனை உள்ளது. காரணம், அவர்கள் யாரையும் ஏமாற்றுவது இல்லை. நேர்மையாக நடந்து கொள்கிறார்கள்.

 முறைப்படி எல்லாம் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அனைவருக்கும் மதிப்பு தர வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், படித்தவர்கள் மத்தியில் இந்தப் பழக்கமெல்லாம் அறவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நேர்மையும், உண்மையும், மரியாதை தரும் பழக்கமும் கேள்விக்கு உரியதாகிவிட்டது.

 படித்தவர்கள் எந்தெந்தக் குறுக்கு வழியில் சென்றால் என்னென்ன நன்மைகள் அடையலாம் என்றும் அதற்கு என்னென்ன தவறுகள் செய்வது, அதிலிருந்து எப்படி தப்பிப்பது போன்ற அனைத்தும் தெரிந்துகொண்டு செயல்படுகிறார்கள். படித்தவர்கள் மீதுள்ள இந்தக் களங்கத்தைப் போக்க படித்தவர்கள்தான் தங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். படித்தவர்களும் நீதியை, நேர்மையை, நியாயத்தை விரும்புகிறவர்கள் என்கிற எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இது படித்தவர்களுடைய தலையாய கடமை.

 மேலும், அவரவர்களுக்கு என்ன சம்பளமோ அதை வைத்துதான் வாழ்க்கை நடத்தத் திட்டமிட வேண்டும்.

 அதைவிட்டு, தன்னை விட உயர்ந்த பதவியில் இருப்பவரின் நிலையைப்போல் நாமும் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டால் அது தவறான செயலுக்கு வழிவகுத்துவிடும்.

 நன்றாக வேலை செய்து நியாயமான முன்னேற்றமாக இருந்தால் வரவேற்கலாம். அதைவிட்டு குறுக்கு வழியில் செல்வது ஏற்பதாகாது.

 நாம் எப்படி வாழ வேண்டும் என்று நியதி இருக்கிறதோ, அதைப்போல சம்பாத்தியத்தை சரியான வழியில் செலவிட்டு மீதியை சேமித்து வைக்கும் பழக்கமிருந்தால் எப்போதும் வாழ்க்கை இன்பமாகவும் முன்னேற்றமாகவும் இருக்கும்.

 ஆசைகள்தான் வாழ்க்கையை இன்பமயமாக்குகிறது. ஆனால், பேராசை வாழ்க்கையைத் துன்பமயமாக்குகிறது. எனவே, வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை நாமே முடிவுசெய்து கொள்ள வேண்டும்.