உண்மை அன்பு என்றால் என்ன ..?

06/08/2014 21:01

       

உண்மை என்றால் என்ன என்பதற்கு வார்த்தைகளால் விளக்கம் கொடுக்க முடியாதது போலவே அன்புக்கும் விளக்கம் கொடுக்க முடியாது.

உண்மைக்கு கொடுக்கப்படும் விளக்கங்கள் அதன் உண்மைத்தன்மையை விளக்கமுடியாதது போலவே அன்புக்கும் விளக்கம் கொடுப்பதாகும். அன்பு என்பது உள்ளுணர்வு.

அது என்ன என்பது அவரவரது அனுபவம் மட்டுமே. நாம் ஒரு இனிப்பு பண்டத்தைச் சாப்பிடும் போது அதன் உண்மையான அனுபவம் அல்லது உணர்வு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக இருப்பதைப் போன்றதுதான் அன்பும்.

ஆனால் இனிப்பு இனிக்கும் என்கிறோம். ‘இனிப்பு என்றால் என்ன?’ எனக் கேட்டால் இப்போது இனிப்புக்கு விளக்கம் கொடுப்பது சிரமாகிவிட்டதல்லவா? அவ்வாறு தான் அன்பு என்றால் என்ன என்பதும்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்வதற்கு அதற்கு எதிரான ஒன்றைப் பயன்படுத்துவது வழக்கம். உதாரணமாக உண்மை என்றால் என்ன என்பதைப் புரிய வைப்பதற்கு பொய் அல்லாதது என்று கூறுவதுண்டு.

இந்த விளக்கமும் கூட அடித்தளம் அற்றது. ஏனெனில் பொய் என்றால் என்ன என்று கேட்டால் நிலையற்றது, மறைத்தல், மாற்றிக் கூறுதல், ஏமாற்றுதல் என அடிக்கிக் கொண்டு செல்கிறோம். முடிவுக்குக் கொண்டுவரமுடியாத விளக்கங்கள
அன்பு ஒரு ஒருவழிப்பாதை.

அன்பைக் கொடுக்க மட்டும்தான் முடியும். அன்பைப் பெறமுடியாது. அன்பைப் பெறுவதாக நாம் உணரும்போதும் அது கொடுப்பதாக மட்டுமே அமையும். அன்பு என்பது எமது உள்ளுணர்வாக இருப்பதால் அதற்கு எதிரானதும் ஒரு உணர்வுதான். எது அன்பைக் கொடுப்பதற்கு தடையாக இருக்குமோ அது அன்புக்கு எதிரானது.

நேசம், பாசம், நட்பு, காதல், விருப்பம் என்பவற்றையும் நாம் அன்பின் வடிவங்களாக அறியப்படுத்தப் பட்டிருக்கிறோம். நாம் என்ன வடிவத்தைக் கொடுத்தாலும் அன்பு ஒன்றுதான். அது ஒரு முழுமை.

அன்புக்கு வடிவம் கொடுப்பதனாலேயே நாம் அன்புக்கு எதிரானது என்றவுடன் வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என பலவற்றைக் கருதிக்கொள்கிறோம். அதாவது இவ்வாறன உணர்வுகள் அன்புக்குத் தடையாக அமையும் எனக் கருதுகிறோம். இப்போது ஒரு விடையத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

அதாவது, வன்பு, வெறுப்பு, துரோகம், சுயநலம் என நாம் குறிப்பிடுபவையும் ஒரு முழுமைக்கு நாம் கொடுக்கும் வடிவங்கள் தான் என்பதே. இந்த முழுமை அன்புக்கு எதிரானதாக செயற்படும் முழுமை. அந்த முழுமைதான் 'பயம்'. அதாவது அன்பு எனும் முழுமை ஒன்று, பயம் எனும் முழுமை இன்னொன்று.

இங்கே முழுமை என்பதன் பொருள் ஒரே நேரத்தில் இரண்டில் ஒன்று தான் இயங்கும் என்பதே. அன்பு இயங்கினால் பயம் இயங்காது, பயம் இயங்கினால் அன்பு இயங்காது. இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று எதிரானவை.

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு அற்புதமான விடயம் என்னவெனில், எமது ஒவ்வொரு நகர்வும் அன்பினால் நகர்த்தப்படுகின்றதா அல்லது பயத்தினால் நகர்த்தப்படுகின்றதா என்பதை மிக இலகுவாக நாம் இனம் கண்டுகொள்ள முடியும் என்பதுதான்.