உலகக் கோப்பையை வென்றது ஜெர்மனி. அர்ஜென்டினா அதிர்ச்சி

14/07/2014 07:20

                            

 

உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் கோப்பையை தனதாக்கிக் கொண்டுள்ளது ஜெர்மனி அணி.

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.

நான்காவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஜெர்மனியும், மூன்றாவது முறையாக சாம்பியனாகும் முயற்சியில் அர்ஜென்டினாவும், மரக்கானா மைதானத்தில் களமிறங்கியன.

ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் கோல் அடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை அர்ஜென்டினா வீரர் ஹிகுவைன் வீணடித்தார். கோல் அடித்து விட்டதாக போட்டியின் 30வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் நடுவர் ‘ஆஃப் சைட்’ என அறிவிக்க, ஜெர்மனி வீரர்கள் நிம்மதியடைந்தனர். 37வது நிமிடத்தில் ஜெர்மனியின் கோல் முயற்சியை ருமேராவும், 40வது நிமிடத்தில் மெஸ்சியின் கோல் வாய்ப்பை ஜெர்மனி அணியினரும் தகர்த்தனர்.

முதல் பாதியில் இரு அணியும் கோல் அடிக்காதால், இரண்டாவது பாதியில் கோல் முயற்சியை வேகப்படுத்தினர். 47வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சி கோல் வாய்ப்பை கோட்டை விட்டார். ஜெர்மனியின் தாக்குதல் ஆட்டத்திற்கும், தடுப்பணை போட்டனர் அர்ஜென்டினா வீரர்கள்.

90 நிமிட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம், தொடர்ச்சியாக மூன்றாவது முறை கூடுதல் நேரம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. கூடுதல் நேரத்தின் முதல் பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். கூடுதல் நேரம் நிறைவடைய 7 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது, ஜெர்மனி வீரர் மரியோ கோட்ஸி, கோல் அடிக்க மரக்கானா மைதானமே கரவோசையால் அதிர்ந்தது. அர்ஜென்டினா அணியின் கோல் முயற்சிக்கு இறுதி வரை பலன் கிட்டவில்லை.

முடிவில், 1-0 என்றகோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஜெர்மனி அணி நான்காவது முறையாக உலக கோப்பையை வென்றது. இதற்கு முன்னர் 1986, 1990 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பையின் இறுதி ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 1986ல் அர்ஜென்டீனாவும், 1990-ல் ஜெர்மனியும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தென் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில், உலகக் கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற சாதனையையும் ஜெர்மனி படைத்துள்ளது.