தானத்தை விட உயர்ந்தது தாய் பால்

03/08/2014 16:37

தாய்ப்பால் என்பது அரிய உணவு. அதிசய உணவு. தாய்ப்பாலை போதுமான அளவுக்கு குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக மட்டுமல்ல, அறிவாற்றலிலும் உச்சத்தை தொடுவார்கள். எனவே தான் தாய்ப்பாலை தானத்தை விட உயர்ந்ததாக கருதுகிறார்கள்.

இதை கருத்தில் கொண்டே பிறந்த குழந்தைகளுக்கு, தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை உலகம் முழுவதிலும் உள்ள பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த (ஆகஸ்டு 1-ந் திகதி ) முதல் ஒரு வாரத்துக்கு உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது.

மேலைநாடுகளில் பெண்கள் தங்கள் மார்பக அழகு போய்விடும் என்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை. சமீப காலமாக இந்திய பெண்களும் இதே மன நிலைக்கு மாறி இருப்பதால் ஆண்டுக்கு 2 லட்சம் குழந்தைகள் தாய்ப்பால் சத்து கிடைக்காமல் நோய் தாக்குதலுக்கு உள்ளாவதாக கண்டு பிடித்துள்ளனர்.

ஒரு காலத்தில் கிராமத்து பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு 2 வயது ஆகும் வரை தாய்ப்பால் கொடுப்பதுண்டு. அதே நிலையை மீண்டும் ஏற்படுத்த தாய்ப்பால் மகிமை பற்றியும், அதை எப்படி கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் மாலை மலர் சிறப்பு மருத்துவர் டாக்டர் கமலி ஸ்ரீபால் பெண்களுக்கு பயனுள்ள தாய்ப்பால் தகவல்களை கொடுத்துள்ளார்.

ஒரு குழந்தை போதுமான அளவுக்கு தாய்ப்பால் பெற்றால், அது அந்த குழந்தையை மட்டுமல்ல, அவர்கள் குலத்தையே தழைக்க செய்யும் என்பதை பெண்கள் மறந்து விடக்கூடாது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது அக்குழந்தையை காக்க இறைவன் தாய்க்கு அளித்த வரம்.

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திலேயே மருத்துவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்துவர். அதுவும் இயற்கையில் பெறும் உந்துதலால் குழந்தை தன் தாயிடம் வெகு எளிதில் பால் குடிக்கக் கற்றுக் கொண்டு விடும்.

தாய்க்கு ஏதேனும் குறிப்பிட்ட வகை மருந்து, எடுத்துக் கொள்ளும் தாய்மார்கள் தொற்று நோய் போன்ற பாதிப்புகள் இருந்தால் மட்டுமே குழந்தைக்கு மாற்று உணவினைப் பற்றி மருத்துவர்கள் பரிசீலித்து பரிந்துரைப்பார். முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கச் சொல்வர். பிறகு தாய்ப்பாலும் பிற உணவு வகைகளையும் சேர்ப்பர்.

2 வயது வரை மற்ற உணவுகளோடு தாய்ப்பாலும் கொடுப்பது மிக மிக நன்மை பயக்கும். இந்த தாய்ப்பால் சேய்க்கு ஏற்ற அளவிலான புரதம், நீர் கொழுப்பு, சர்க்கரை என அனைத்து தேவைகளையும் கொண்ட பதமான உணவு. அதிலும் குழந்தை பிறந்த முதல் மூன்று நாட்கள் நீர்த்த திரவம் போன்று வெளிவரும்.

`கொலஸ்ட்ரம்’ எனும் பால் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தியினைக் கொண்டது. தாய்ப்பாலுக்கு இணையாக எந்த செயற்கை முறையிலும் ஈடு செய்து தயாரிக்க முடியவில்லை என்பதே தாய்ப்பாலின் சிறப்பு.

தாய்ப்பால் குழந்தைக்கு

ஒரு முழு உணவு
எளிதில் ஜீரணம் ஆகும்
குழந்தை தாடை வலுப்படும்
குடல், வயிறு வலி இருக்காது
சர்க்கரை நோய் பாதிப்பு குறையும்
அபார நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்
குண்டாக உடல் உருவாவதைத் தடுக்கும்
குழந்தையின் கவனிக்கும் திறன் கூடும்.
நல்ல மனநலம் உருவாகும்

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் பெறும் நீண்ட கால பலன்கள்:-

அலர்ஜி இவர்களை அதிகம் தாக்குவதில்லை
மார்பக புற்றுநோய் வாய்ப்பு மிகவும் குறைவு
இருதய நோய் பாதிப்பு குறைவு
புத்தி கூர்மை இருக்கும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய் பெறும் பயன்கள்:-

கர்ப்பபை நன்கு சுருங்கும்
மார்பக புற்று நோய் அபாயம் குறைவு.
மனச்சோர்வு, மன உளைச்சல் இருக்காது.
எலும்புகளின் தேய்மானம் நன்கு கட்டுப்படும்.
தாய், சேய் புனித உறவு மேம்படும்.
செலவு இல்லை.
நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும்.