தாம்பத்தியத்துக்கு ஆப்பு வைக்கும் செல்போன்! மருத்துவர்கள் எச்சரிக்கை

06/12/2014 08:42

‘முன்பெல்லாம் வீடுகளில் மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்ததும் கொஞ்சம் நேரம் வானொலி கேட்பார்கள். பிறகு, தொலைக்காட்சி என 9 மணிக்குள் தூங்கப் போய்விடுவார்கள். அதன் பின் தம்பதிக்கு வேறெந்த வெளித்தொந்தரவும் இருக்காது. ஆனால், இன்று மூன்றாவது கையாக, ஆறாவது விரலாக ஆகிப்போன செல்போனை பலரும் படுக்கை அறையிலும் பிரியாமல் இருப்பதால், அது அவர்களின் செக்ஸ் வாழ்க்கையை தொந்தரவு செய்வதாக அமைகிறது!’’ என அதிர்ச்சி கொடுத்து ஆரம்பிக்கிறார் பாலியல் மருத்துவர் டாக்டர். காமராஜ்.

‘‘செல்போனை பேன்ட் பாக்கெட்டில் வைக்கும்போது, செல்போன் கதிர்கள் விந்தணு உற்பத்தியைக் குறைப்பதால் ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது என்கின்றன ஆராய்ச்சிகள். இதனால் குழந்தையின்மைக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இது உடல் ரீதியான பிரச்னை என்றால், தாம்பத்யத்தில் மனரீதியாகவும் செல்போன் பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

செல்போன் இப்போது பொழுதுபோக்கின் முக்கிய அம்சமாக, அதுவும் உள்ளங்கைக்குள்ளேயே அதை சாத்தியப்படுத்துவதால், பலரும் தங்களின் இணைக்குத் தர வேண்டிய நேரத்தை மொபைலில் வீணாக்குகிறார்கள். அது அவர்களின் நெருக்க நேரங்களைத் திருடி விடுகிறது. அடுத்ததாக, செல்போனில் இன்று வந்துவிழும் வீடியோக்கள் எண்ணற்றவை. ஜாலி, கேலி என்ற சந்தோஷ உணர்வுகளைத் தாண்டி, ஒரு பெண்ணை கொலை செய்யும் வீடியோ, ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்படும் வீடியோ, பத்திரிகையாளர்கள் கழுத்தறுக்கப்பட்டுக் கொல்லப்படும் வீடியோ என இப்படிப்பட்ட வீடியோக்களை பார்த்தபின், கண்டிப்பாக செக்ஸ் மூடு வரவே வராது. இந்த வகையிலும் தாம்பத்தியத்துக்கு சமாதி கட்டுகின்றன் செல்போன்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, தாம்பத்யத்துக்கு தொந்தரவு இல்லாத சூழல் தேவை. ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடும்போது, யாராவது கதவைத் தட்டினால் என்ன ஆகும்? அதேபோல்தான், அந்த நிமிடங்களில் மெஸேஜ், கால் என்று மொபைல் அழைக்கும்போது, ஆணின் விரைப்புத்தன்மை குறைந்துவிடும். அதோடு மொபைலில் குவியும் கவனத்தால் அவர் மனநிலையும் மாறிப்போக வாய்ப்பிருக்கிறது.

தாம்பத்தியத் தொந்தரவுகள் மட்டுமல்ல, 15 நிமிடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து செல்போனில் பேசுகிறவர்களுக்கு காது கேட்கும் திறன் குறைய வாய்ப்பு, தலையணைக்கு அடியில் செல்போனை வைத்து உறங்குகிறவர்களுக்கு மூளைப்புற்றுக்கான வாய்ப்பு என்று செல்போன் தரும் எதிர் விளைவுகள் எக்கச்சக்கம்.

மொத்தத்தில், முழுமையான தாம்பத்திய உறவு வேண்டுகிறவர்கள் செல்போனை பெட்ரூமுக்குள் கொண்டு போகாதீர்கள்!’’ என்று வலியுறுத்துகிறார் டாக்டர். காமராஜ்.