நோயின்றி நாம் வாழ

11/09/2014 18:27

இயற்கை நமக்களிக்கும்
இனிமையான பிறப்பு
புன்னகை பூத்து - இன்முகம்
சிவக்க அரியதோர் வாய்ப்பு
அழுகை ஒலியுடன் அகிலத்தில்
அடிவைத்து அரவணைக்கும்
தாயிடம் - கண்டதோ
ஆனந்தக் களிப்பு

இந்த ஆனந்தக்களிப்பு - நம் வாழ்வில் தொடர நோயின்றி இவ்வுலகில் நாம் வாழ வேண்டும். நோயின்றி மனிதன் தன் வாழ்நாளில் வாழ முடியுமா? இது இன்றைய நவீன வாழ்க்கையில் ஓர் ஆச்சரியக் கேள்விக்குறி? ஏனென்றால் நம் மனமானது.

நோயுடனே வாழ்வதற்கு தன்னைத்தயார்படுத்திக் கொண்டு விட்டது என்று தான் நினைக்க வேண்டி உள்ளது. இயற்கை நமக்களித்த அய்ந்து உயிர் இயக்க சக்திகளான மண், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் எனக்கூறி அதன்மீது ஓர் மாயை என்னும் பய உணர்வை ஏற்படுத்தி இந்த அய்ந்து உயிர் சக்திகளையும், உயிர்களைக் கொல்லும் உயர் சக்தி என்று  பயப்பட்டு, படாதபாடுபட்டு, நல்லதோர் மானிடனை மனித நேயமற்று நமக்குள்ளே பகை உணர்வை பரப்புவதிலே குறியாக செயல்பட்டு குதூகலம் அடைந்த ஒரு கூட்டம் செய்த சதியே இன்று நாம் அடையும், மனநோய்க்கும், உடல் நோய்க்கும், சமூக நோய்க்கும் அடிப்படை என்பதை மனித இனம் அறிவுசார் விளக்கங்கள் மூலமாக தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டு வருகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

பெற்றதாய் நமக்கு பாலூட்டி வளர்ப்பாள் இயற்கை தாய் நம்மை நலமாக வளர்ப்பாள். நம் தந்தை நம்மை நல்வழியில் வளர்ப்பார். இருளர் நம்மை எவ்வாறு வளர்ப்பார்? இன்னுமா புரியவில்லை இயற்கையின் சிறப்பை!

மனிதன் நலமாக வாழ ஆறு அடிப்படைத் தேவைகள்

1. சிறந்த சூரிய ஒளி
2. தூய காற்று
3. சுத்தமான நீர்
4. சீரிய பயிற்சி (உடற்பயிற்சி, மனப்பயிற்சி)
5. சத்தான உணவு
6. அமைதியான தூக்கம்

இவை ஆறும் சிறப்பாக அமைந்தால் உடலும் மனமும் ஆறுதல் அடையும். இவ்வாறு சிறப்புப்பெற்றால் நோய் ஆறும் நம்மைவிட்டு அகலும், இவற்றில் நாம்தினம் குளித்தால் எவ்வாறு நோய் உண்டாகும்?

1. சிறந்த சூரிய ஒளி

நம் முன்னோர்கள் இயற்கையை ஆராய்ந்து கூறியதில்,  காலையில் சூரிய உதயத்தின் முன்பே எழுந்து காலைக்கடன்களை முடித்து பின், சூரிய உதயத்தின் போது திறந்த வெளியில், சில அடிப்படை உடல் பயிற்சிகளை, காலைக்கதிரவன் ஒளிப்படச் செய்தால், பலவிதமான நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்பதை நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் தெளிவுபடக் கூறுகின்றன.

2. தூயக்காற்று

மனிதனின் நோயில்லா வாழ்விற்கு மிக முக்கியமான தேவை சுத்தமான பிராணவாயு, இன்று அந்த பிராண வாயுவிற்கே களங்கம் ஏற்படும் வகையில் நவீன வாகனங்களின் புகைகளும், தொழிற்சாலைகளிலிருந்து வரும் கலப்படமான விஷ வாயுக்களும் கலந்து பூமியில் வாழும் உயிரினங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக முக்கிய காரணமாகிப் பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணமாகின்றது.

3. சுத்தமான நீர்

நீரில்லையேல் இவ்வுலகே இல்லை. இவ்வுலகே இல்லையேல், இவ்வுலகில் உயிர்கள் வாழ முடியவில்லை. எல்லா உயிர்களின் அடிப்படை வாழ்வாதாரமே நீர்தான் தண்ணீர் இல்லையேல் கண்ணீர் கூட தோன்றாது. எனவே ஆனந்தக் கண்ணீர் வர தண்ணீர் தேவை அடிப்படை தண்ணீர் ஆதாரங்களை நாம் அழித்தால் கண்ணீர் விட்டு அழும் காலம் வெகு விரைவில் இல்லை. விலை கொடுத்து தண்ணீர் வாங்குவது இன்று கவுரவமாகத் தோன்றுகிறது. இன்று பாட்டில்களில் வரும் தண்ணீரே நோய்களுக்கு காரணமாகிறது என்பதை நாம் அறிந்து கொண்டு, விழிப்படைய வேண்டும்.

4. சீரிய பயிற்சி (உடற்பயிற்சி, மனப்பயிற்சி)

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும், அடியெடுத்து நாம் நடந்தால் நோய் நம்மை விட்டு அகலும்
நல்லதோர் நடைப்பயிற்சி
நோயின்றிவாழும் முயற்சி
நல்லதோர் ஓட்டப்பயிற்சி
நோய்களை ஓட்டும் முயற்சி
நல்லதோர் மனப்பழக்கம்
நோயின்றி வாழ பழக்கம்
இனியும் ஏன் தயக்கம்
இன்னும் வேண்டுமோ விளக்கம்?

5. சத்தான உணவு

சுத்தமான, சத்தான உணவு தான் ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை இயற்கை உணவுகளான கீரை, காய்கறிகள், மீன், முட்டை, கலப்படமில்லா இறைச்சிகள், பயிறு வகைகள், தானியங்கள், இளநீர் போன்ற இயற்கையிலிருந்து கிடைக்கும் உணவுகளை உண்டால் நாம் நோயின்றி வாழலாம். செயற்கை உணவுகளைத் தவிர்த்தால் செயற்கை சுவாசம் பெற்று உயிர்வாழ கருவிகளிலிருந்து நாம் பிராண வாயு பெறாமல் இயற்கையான காற்றை சுவாசித்து இனிமையாக நோயின்றி வாழலாம்.

6. அமைதியான தூக்கம்

அமைதியான தூக்கமே அனைத்து வித
நோய்களுக்கு அருமருந்து
தூங்காத கண்கள் சோர்வடைந்து தோன்றும்
தூங்காத மனமும் நிலை தளர்ந்து போகும்.
தூக்கமில்லா வாழ்க்கை துக்கமான வாழ்க்கை
சீக்கிரம் தூங்கி விடியற்காலை எழுந்தால் புதுக்காலை
தினமும் பொலிவுடன் புலரும் புதியதாய்
சிந்தனைகள் பூக்களாய் மலரும், நோயில்லா புதுவாழ்வு
நித்தமும் நிகழும் நல்ல நித்திரை முத்திரை
பதிக்கும், அறிவார்ந்த உலகம் அனுதினம்
உதிக்கும், நோயில்லா அகிலம் விரைவில்
பிறக்கும் அனைவரும் முயன்றால்
அகிலமே சிறக்கும்.