ரொமான்ஸ் ரகசியங்கள்

24/10/2014 21:00

தினமும் என்னை கவனி!’
- லாரியில் இருக்கும் பேட்டரி பாக்ஸில் இப்படி ஒரு வாசகம் இருக்கும்.. பார்த்திருக்கிறீர்களா?

லாரியின் பேட்டரிக்கு மட்டுமல்ல.. தம்பதிகளின் இல்லறம் நல்லறமாகப் பயணிக்கவும், இருவருக்கும் இடையே உள்ள ரொமான்ஸ் பேட்டரி சார்ஜ் இறங்காமல் இருக்கவும்கூட, அதற்கு தினசரி கவனிப்பு மிக மிக அவசியம்!

”என் வீட்டுக்காரரை தினமும் கவனிச்சிட்டுதான் இருக்கேன். வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டு, அவர் துணியெல்லாம் துவைச்சுப் போட்டு..” என்று ஒரு லிஸ்ட் உங்களிடமும், ”மளிகை சாமான்லாம் வாங்கிப் போட்டு, உடம்பு சரியில்லேன்னா டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போயி..” என்று ஒரு லிஸ்ட் அவரிடமும் இருக்கும்தான்!

நீங்கள் தப்புக் கணக்கு போடுவது இங்கேதான். சமைத்துப் போடுவதும், மார்க்கெட் போவதும் திருமண மான புதிதில் வேண்டுமானால், ஸ்பெஷல் கவனமாக உங்களின் துணைக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், இந்த சில, பல வருஷங்களில் இவையெல்லாமே உங்கள் தினசரி வேலையாகி விட்டதே! அப்படியெனில், கவனிப்பு என்பது.. அதன் அர்த்தமே வேறு!

ரமணன் படு பிஸியான ஆள்! காலையில் கம்பெனிக்குக் கிளம்பினால், வீடு திரும்ப தினமுமே ராத்திரியாகி விடும். பிள்ளைகள் இருவரும் தூங்கிய பிறகுதான், வீட்டுக்கு வருவான். அது என்னதான் ரிமோட் கன்ட்ரோலோ.. கணவனின் பைக் சத்தம் தெரு முனையில் வரும்போதே அடையாளம் தெரிந்துவிடும் ராணிக்கு. சட்டென்று எழுந்து சூடாக சப்பாத்தி போட தோசைக் கல்லை அடுப்பில் வைப்பாள்.

என்ன ஒரு அன்னியோன்யம்! கிண்டலும் கேலியுமாக ரமணனே ஒருமுறை அவளிடம் கேட்டான்..

‘‘பதிவிரதை கேள்விப்பட்டிருக்கேன். நீ டெலிபதி விரதையா இருக்கியே.. அதெப்பிடி? நான் நினைக்குறதை எல்லாம் புரிஞ்சுக்கிட்டு அதை செஞ்சு முடிச்சுடுற.. ஆறு மணியானதும் ‘வெய்ட்டிங் ஃபார் யூ’னு எஸ்.எம்.எஸ் அனுப்புற.. வருஷம் எத்தனை ஆனாலும் புருஷன் மேல இருக்குற அக்கறையை அப்படியே வச்சிருக்க.. என் மேல அவ்ளோ லவ்வா?’’ என்பான் குறும்பு கொப்பளிக்க.

‘‘ ‘என்னடா.. வீட்டுக்காரரை இன்னும் காணமே’னு காத்திருக்குறது தப்பா?’’ என்பாள் சிணுங்கலாக.
‘‘தப்புனு யார் சொன்னா? எம் பொண்டாட்டி மாதிரி ஊர்ல யாரும் இல்லைனு நான் பெருமையடிச்சுக்கிட்டு திரியிறேன்..’’ என்று பேச்சில் ஐஸ்க்ரீம் கலப்பான் அவன்.

‘‘அடேங்கப்பா! இவர் ஊர்ல இருக்குற எல்லார் வீட்டையும் எட்டிப் பார்த்துட்டு வந்த மாதிரி தான்..’’
‘‘போய்த்தான் பார்க்கணுமா? அவனவன் புலம்புவான்.. கேட்டிருக்கேனே.. வீட்டுக்குள்ள நுழைஞ்சது கூடத் தெரியாதாம். சீரியல் ஓடிக்கிட்டு இருக்குமாம். பசியோட போனாலும் ஒரு வாய்த் தண்ணி கொடுக்கக்கூட வொய்ஃப் எழுந்துக்க மாட்டாங் களாம்.. அதான் சொன்னேன்.. என் ராணி கிரேட்னு!’’

இப்படித் தொடரும் இந்த இனிப்புப் பேச்சு!
இதுதான்.. இதுதான்.. அந்த கவனிப்பு!

காசு கொடுத்து ஒரு கலைப் பொருளை வாங்கி வருகிறோம்.. தினம் தினம் துடைத்து, அவ்வப்போது பாலிஷ் பண்ணி.. எத்தனை பத்திரப் படுத்துகிறோம்! வீட்டை தினமும் பெருக்கி, துடைத்து, வாரம் ஒருமுறை தூசி தட்டி.. எப்படியெல்லாம் பாதுகாக்கிறோம்!

உயிரில்லாத இவற்றுக்கே தினசரி கவனம் தேவையாக இருக்கும்போது, இதயம் நுழைந்து, உயிரில் கலந்து வாழும் அந்த உறவுக்கும் உணர்வுக்கும் எப்பேர்ப்பட்ட அக்கறை தேவை!

‘‘ஆனால், இந்தக் காலத்தில் பெரும் பாலான தம்பதிகள் தங்கள் துணை என்று எந்த சிறப்புக் கவனமுமே எடுப்பதில்லை. மற்ற எல்லா உறவு களைப் போல இதுவும் ‘இன்னொரு’ உறவு என்பதாகத் தான் கருதுகிறார்கள். அதுதான் அவர்கள் மனம் பிளவுபடுவதன் காரணம்..” என்கிறார், தம்பதிகள் பற்றிப் பல ஆய்வுகளை நடத்தியிருக்கும் அமெரிக்க புரொபஸர் ஜான் காட்மேன் என்பவர்.

மாதம் ஒருமுறையோ வாரம் ஒருமுறையோ அல்ல.. தினம் தினமுமே உங்களின் துணைக்காக, ஸ்பெஷலாக ஒரு விஷயத்தைச் செய்யுங்கள். ‘‘எனக்கு அதுக்கெல்லாம் நேரம் கிடையாதுங்க..’’ என்கிறீர்களா?

காந்தாரி கண்ணைக் கட்டிக் கொண்ட மாதிரியெல்லாம் உங்களை மெனக்கெடச் சொல்லவில்லை. சின்னச் சின்ன விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவ்வளவுதான்! ராணி செய்வது மாதிரி..

காலை பரபரப்பில் கிளம்பும் கணவனிடம், ‘‘மீட்டிங்னு சொன்னீங்களே.. யெல்லோ ஷர்ட்டை விட இந்த பிங்க் ஷர்ட் இன்னும் நல்லா இருக்கும்..’’ என்று எடுத்துத் தருவாள்.

திடுமென்று லஞ்ச் நேரத்தில் போன் பண்ணி, ‘‘சும்மா தான்.. உங்ககிட்ட பேசணும்போல இருந்தது..’’ என்பாள் – ஆத்மார்த்தமாக!

அதனால்தான் ஆயிரம் வேலைகளுக் கிடையிலும், ரமணனின் மனதுக்குள் எப்போதும் புன்னகைப் பூவாக இருக்கிறாள் ராணி. எத்தனைதான் டென்ஷனாக இருந்தாலும் அவள் தன்னைக் கவனிப்பதை, தனித்து கவனிப்பான் ரமணன். ஆகவேதான்.. என்றைக் காவது ஒரு நாள்.. ஒரே ஒருநாள்.. வேலை சீக்கிரம் முடிந்தால்கூட, அலுவலக நண்பர் களிடம் கதை அளந்து கொண்டு நேரத்தை வீணடிக்காமல், வீட்டுக்குப் பறந்து வந்து விடுவான்.. ராணி எஸ்.எம்.எஸ் கூட அனுப்பும் முன்னால்!