அச்சுவேலியில் லண்டனிலிருந்து வந்து தங்கி இருந்தவரிடம் திருட்டு

அச்சுவேலியில் லண்டனிலிருந்து வந்து தங்கி இருந்தவரிடம் திருட்டு

லண்டனிலிருந்து விடுமுறையில் குடும்ப உறவினரைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்தவரின் வீட்டுக் கூரையைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் வெளிநாட்டுப் பணங்க ளைத் திருடிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு அச்சுவேலி வடக்கு வல்லையில் நடைபெற்றுள்ளது. வீட்டுக்கூரை ஓடுகள் இரண்டு இடங்களில் பிரிக்கப்பட்டு அதனூடாக உள்ளே இறங்கிய திருடர்கள் கதவைத் திறந்து மூன்று பெரிய சூட்கேசுகளை வீட்டுக்கு வெளியே எடுத்துவந்து தேடுதல் நடத்தி அதன் உள்ளே வைக்கப்பட்டிருந்த ஆயிர த்து 500 ஸ்ரேலிங் பவுண் நோட்டுக்களையும் மற்றும் இலங்கை ரூபா நோட்டுக்களையும் திருடிச் சென்றுள்ளனர்.

வீட்டில் ஐந்து பேர் படுத்திருந்தபோதும் இவர்களின் நடமாட்டம் தொடர்பாக எந்த அசைவும் தெரியவில்லை எனத் தெரிவிக் கும் வீட்டின் உரிமையாளர்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுவதைத் தடுப்பதற்கு இரசாயனம் எதுவும் பாவிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகத் தெரிவித்தனர். அதிகாலையில் வெளியே வந்தபோது, சூட்கேசில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் முற்றத்தில் வீசப்பட்டும் வீட்டுக்கு வெளியே ஒரு சூட்கேஸ் வீசப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இச்சம்வம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் வீட்டிற்குச் சென்று மோப்ப நாயின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.