அமெரிக்கா செல்லும் மூன்று யாழ் மாணவர்கள்

அமெரிக்கா செல்லும் மூன்று யாழ் மாணவர்கள்

யாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையில் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் எதிர்வரும்-யூன் மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இடம்பெறும் விசேட தேவையுடைய மாணவருக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்குச் செல்கின்றனர்.

அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட விசேட தேவையுடைய மாணவருக்கான மெய்வல்லுநர் போட்டியில் தமது சிறப்பான திறமையை வெளிப்படுத்தியமை மூலம் இந்த மூன்று மாணவர்களும் இவ்வாறு தெரிவாகியுள்ளனர்.

கடந்த மாதம் மாத்தறை சர்வதேச விளையாட்டரங்கில் இவர்கள் தமது பயிற்சிகளை மேற்கொண்ட நிலையில்,யாழ்.பல்கலைக்கழக மைதானத்திலும் இவர்களுக்குத் தினமும் தீவிர பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவுக்குச் செல்லவுள்ள குறித்த மாணவர்களில் ஒரு மாணவனுக்குரிய போக்குவரத்துச் செலவை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

கோண்டாவில் சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை மாணவர்கள் மூன்றாவது தடவையாக சர்வதேச விசேட தேவையுடைய மாணவர்களின் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றும் சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.