அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒருவர் தீவிபத்தில் மரணம்!

அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்களின் நன்மதிப்பை வென்ற சமூகத் தலைவர் ஒருவர் தீவிபத்தில் பலியாகியுள்ளார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பல சமய, கலாசார, கல்வி நிறுவனங்களை ஸ்தாபித்தவரும், பிரதேசவாசிகளின் நன்மதிப்பை வென்றவருமான எஸ்.எம்.பரமநாதன் அவர்கள் வெள்ளிக்கிழமை மாலை தமது இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

73 வயதான திரு.பரமநாதனின் வீட்டினுள்ளிருந்து புகை வெளியேறியதை அவதானித்த அயலவர்கள் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்திருக்கிறார்கள்.

அதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்புப் படைவீரர்கள் பூஜையறையில் சிக்கியிருந்த திரு.பரமநாதனை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள்.

தாம் தீச்சுவாலைகளை அணைத்து திரு.பரமநாதனை வெளியே கொண்டு வந்த போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லையென மவுன்ட் ஒமானி தீயணைப்புச் சேவைகள் நிலையத்தைச் சேர்ந்த மைக்கல் எல்டர் தெரிவித்தார்.

இந்த முதியவர் பூஜையறையில் விளக்கேற்றுவதற்காக மெழுகுதிரியைப் பற்ற வைப்பது வழக்கம். அது தான் தீ பற்றியதற்கு காரணமாக அமைந்ததா என்பதை அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்.

திரு.பரமநாதனின் மனைவி திருமண வைபவமொன்றில் கலந்து கொள்வதற்காக மெல்பேர்ண் சென்றிருந்த சமயத்தில் விபத்து நிகழ்ந்திருக்கிறது.

சனிக்கிழமை காலை வீடு திரும்பிய அவரை உறவினர்கள் ஆறுதல்படுத்தினார்கள். இந்தத் தம்பதியருக்கு இரு பிள்ளைகள்.

திரு.பரமநாதன் அனைவருடனும் சகஜமாகப் பழகும் நல்ல மனிதர் என அயலவர்கள் கூறுகிறார்கள்.

பக்கத்து வீட்டில் குடியிருந்த கிரிஸ் மொரிஸ் கருத்து வெளியிடுகையில்,

இந்த மனிதரின் வீட்டில் மாதமொரு தடவை விருந்து நடப்பது வழக்கம். விருந்து முடிந்தவுடன் தமது வீட்டில் எஞ்சிய உணவுப் பொருட்களையெல்லாம் கொண்டு வந்து அயலவர்களுக்கு பகிர்ந்தளிப்பார்,’ என்றார்.

இந்த மனிதரின் மரணம் அயலவர்களுக்கு மாத்திரமன்றி, குயின்ஸ்லாந்தின் தென்கிழக்கில் வாழும் தமிழ் சமூகத்தவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதென அவுஸ்திரேலிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.