ஆண்-பெண் சமத்துவம் இல்லாத வீட்டு வேலைகள்.பெண்கள் வேதனை

ஆண்-பெண் சமத்துவம் இல்லாத  வீட்டு வேலைகள்.பெண்கள் வேதனை

வீட்டு வேலைகளை செய்வதில் ஆண்-பெண் சமத்துவம் நிலவவில்லை என்று கருத்துக் கணிப்பின்போது 3-ல் 2 பங்கு பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘துணி துவைப்பது பெண்களுக்கான வேலையா?’ என்பது குறித்த கருத்துக் கணிப்பை ஏரியல் சலவைத் தூள் தயாரிப்பு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நீல்சன் இந்தியா நிறுவனம் நடத்தியது. மும்பை, சென்னை, டெல்லி, ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் சுமார் 1000 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. மும்பையில் டப்பாவாலாக்கள் இந்த கருத்துக் கணிப்பில் பயன்படுத்தப்பட்டனர்.

கருத்துக் கணிப்பு முடிவுகளில் “துணி துவைப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளை செய்வதில் ஆண்-பெண் சமத்துவம் நிலவவில்லை” என்று 3-ல் 2 பங்கு பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் மும்பை லோயர் பரேல் பகுதியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

இக்கூட்டத்தில் முன்னணி திரைப்பட நடிகைகள் ஷில்பா ஷெட்டி, நேஹா தூபியா, மந்த்ரா பேடி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, “துணி துவைப்பது, உணவு சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது ஆகிய வேலைகளை பெண்கள்தான் பெரும்பாலும் செய்கின்றனர். வீட்டு வேலைகளை செய்வதில் தங்கள் கணவர்களை விட தாமே அதிக நேரத்தை செலவிடுவதாக 70 சதவீத திருமணமான பெண்கள் நினைக்கின்றனர். வீட்டு வேலைகளில் ஆண்களும் உதவி செய்ய வேண்டும் என்று 83 சதவீத பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.

அலுவலகம், வீடு என இரு இடங்களிலும் நாங்கள் உழைக்க வேண்டியுள்ளது என்று 85 சதவீத வேலைக்குச் செல்லும் பெண்கள் வருந்துகின்றனர். துணி துவைப்பது பெண் களின் வேலை என்று 76 சதவீத ஆண்கள் நினைக்கிறார்கள்” என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.

பெண்களின் இந்த ஆதங்கத்தை ஆண்கள் காதுகொடுத்து கேட்க வேண்டும். ஆண்-பெண் வேறுபாடு மறைந்து, வீட்டில் மகிழ்ச்சி நிலவ வீட்டு வேலைகளை இருவரும் பகிர்ந்து செய்ய வேண்டும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.