இன்று ஆரம்பமாகவுள்ள வற்றாப்பளை பொங்கல்; தீர்த்தமெடுத்தல் நிகழ்வு

   இன்று ஆரம்பமாகவுள்ள வற்றாப்பளை பொங்கல்; தீர்த்தமெடுத்தல்   நிகழ்வு

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து அதில் ஒரு வாரம் விளக்கேற்றும்  நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது . முள்ளியவளை காட்டா விநாயகர் கோயிலிலிருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு பக்தர்கள் புடைசூழ தீர்த்தம் எடுப்பதற்காக புறப்படுவர். சிலாவத்தைக் கடலிலேயே தீர்த்தம் எடுக்கப்படும்.    

பொங்கல் நடைபெறப் போகின்ற தென்பதை உபகரிப்புக்காரருக்கும் பொதுமக்களுக்கும் புலப்படுத்தும் பாக்குத் தெண்டல் நிகழ்வு கடந்தவாரம் இடம்பெற்றது. பாக்குத் தெண்டியவரே தீர்த்தமெடுக்கும் வெங்கலப் பாத்திரத்தைச் சுமந்து செல்வர். தீர்த்தமெடுப்பவர் தன் வாயை வெள்ளைத் துணியால் கட்டியிருப்பர். தீர்த்தமெடுப்பவருக்கு உதவியாக இருவர் பணியாற்றுவர்.    கடலில் இறங்கி வாயூறு நீர்வரைக்கும் சென்று நிற்பர். பாத்திரத்தைத் தோளில் தாங்கி வைத்திருக்கும் போதே கடல் அலை வந்து மூடும் போது பாத்திரம் தண்ணீரால் நிறைந்துவிடும். தண்ணீர் நிறைந்த பாத்திரத்தை அங்குள்ள மடையில் வைத்துப் பூசை செய்வர்.    அதன் பின்னர் பிற்பகல் சுமார் 6.30 அளவில் அங்கிருந்து காட்டா விநாயகர் கோயிலை நோக்கிப் புறப்படுவர். அப்பொழுது கடற்கரை மண் சிறிதளவு எடுத்துத் துணியில் முடிந்துகொண்டு இன்னொருவர் செல்லத் தீர்த்தக்குடம் வரும்  வழிநெடுகிலும் மக்கள் பந்தலிட்டு மாவிலைத் தோரணம் கட்டி, நிறைகுடம் வைத்து வரவேற்பர். நிறைகுடப் பந்தல்களில் தரித்து நின்று இறுதியில் இரவு ஒன்பது மணியளவில் காட்டாவிநாயகர் ஆலயத்தைச் சென்றடைந்துவிடுவர்.    அங்கு விசேட பூசை நடைபெறும். அந்தத் தருணம் அடிக்கப்படும் ஆலயமணியின் ஓசையும் பறை ஒலியும் சேர்ந்து பரவி அப்பகுதி மக்களை மெயசிலிர்க்க வைக்கும். தீர்த்தக்குடத்தை விநாயகர் ஆலயத்திலுள்ள அம்மன் மண்டபத்தில் இறக்கி வைப்பர். இரவு 10மணியளவில் அம்மன் மண்டபத்தில் கும்பம் வைத்து (அம்மன் கும்பம்), மடை பரவி, ஒரு மட்பாத்திரத்தில், கொண்டுவரப்பட்ட உப்புநீரை நிரப்பி, அதனைக் கடற்கரையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மண்மீது வைத்துத் திரியிட்டு விளக்கேற்றுவர். தொடர்ந்து ஏழு நாள்கள் கடல்நீரில் விளக்கெரியும்.   ஏழாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு விநாயகர் ஆலயத்தில் பொங்கல் நடைபெறும். மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு பொங்கல் பொருள்களுடன் கடல்நீரில் எரியும் விளக்கு என்பன வாத்தியங்களுடன் வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். அன்று பகல் தொடக்கம் பூஜை வழிபாடுகள் இடம்பெறும். இரவு பொங்கல் இடம்பெறும்.  -