இன்று “மாட்டுப்பொங்கல்” தின விழாவாகும்

இன்று  “மாட்டுப்பொங்கல்” தின விழாவாகும்

பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள்  “மாட்டுப்பொங்கல்” தினமாக கொண்டாடும் வழக்கம் பண்டைக் காலம் தொட்டு சைவத் தமிழ் உழவரிடையே நிலவி வருகின்றது. இவ் விழாவை “பட்டிப் பொங்கல்” எனவும் அழைப்பது வழக்கம். இப் பொங்கல் விழா முக்கியமாக உழவர்களினால் தற்பொழுதும் கொண்டாடப்பெற்று வருகின்றது.

உழவனின் உயிர்த் தோழானாக இருந்து மாடாக உழைத்த மாடுகளை (கால்நடைகளை) போற்றி நன்றி கூறும் நோக்கோடு பொங்கி, விருந்து படைத்து, நன்றி கடன் செய்யப் பெறும் நிகழ்வே மாட்டும் பொங்கலாகும். இப் பொங்கல் பொங்குவதனால் “பட்டி” பெருகும் என்பது ஐதீகம்.

“மாட்டுப் பொங்கல்” உழவர்களின் உற்ற நண்பர்கள் கால்நடைகள் தான். நிலத்தை உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்க, (வீட்டுக்கு வெளிச்சம் தர பயன்படும் எரிவாயு அளிப்பதிலிருந்து) எண்ணற்ற விதங்களில் பயன்படும் கால்நடைகளை கெளரவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப் படுகிறது.

உழவுக் கருவிகளை அது டிராக்டராக இருந்தாலும் சரி, கலப்பையாக இருந்தாலும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் மோட்டார் பம்பு செட் உட்பட அனைத்துக் கருவிகளையும் இதே போல செய்வார்கள்.

தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். பொங்கல் பொங்கும் போது “பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல்” என்று எல்லோரும் குரல் கொடுக்க சிறுவர்கள் சந்தோஷித்து குதூகலிப்பார்கள். தொடர்ந்து சாமி கும்பிட்டு கற்பூர தீபாராதனை காட்டப்படும்.

அதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் பிரசாதத்தை கொடுப்பார்கள். இப்படி கால் நடைகளுக்கு நன்றி கூறும் நாளைத்தான் ” மாட்டுப் பொங்கலாக “க் கொண்டாடுகின்றனர்.

தற்காலத்தில் விவசாய உற்பத்தில் பல விதமான இயந்திரங்கள் பாவனையில் வந்துள்ள காரணத்தால் மாடுகளின் தேவை குறைந்துள்ள போதிலும் எம் மூதாதையினர் செய்து வந்த மாட்டுப் பொங்கல் விழா தற்பொழுதும் உழவர்களால் மட்டும் கொண்டாடப் பெற்று வருகின்றது.

மாட்டுப் பொங்கல் தினம் மாடுகளைக் குளிப்பாட்டி, விபூதிக் குறி வைத்து, சந்தணம், குங்குமம் பொட்டுகள் இட்டு, மலர் சாத்தி அல்லது மலர் மாலை சாத்தி, மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து மாட்டுத் தொழுவத்தில் பொங்கல் பொங்கி மாட்டை கடவுளாக மதித்து அதற்கு படையல் படைத்து உண்ணக் கொடுத்து, தாமும் உண்டு மகிழ்வர்.

“நன்றி மறப்பது நன்றல்ல அது மிருகமாயினும்” என்பதே இதன் மூலம் நம் மூதாதையினர் எமக்கு உணர்த்திய பாடமாகும்.