இன்று சர்வதேச மது ஒழிப்பு தினம்

இன்று சர்வதேச மது ஒழிப்பு தினம்

சர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவும் ஒக்ரோபர் 3 ம் திகதி ஐ.நா சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
போதைக்கு கண்டிப்பாக முற்றுப்புள்ளி என்ற தொனிப்பொருளில் மது ஒழிப்பு தினம் இலங்கையில் கொண்டாடப்படுகிறது.
 
மேலும் மதுபோதைக்கு எதிராக சமூகத்தை ஒன்று திரட்டும் நோக்கில் பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்களைத் தெளிவுபடுத்துவதற்கான திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் சந்துன் கனேகொட தெரிவித்துள்ளார்.

மது உணர்வூட்டும் பொருள் அல்ல. உணர்வை, உடலை அழிக்கும் ஒரு நச்சுப் பொருள். மது அருந்துவதால் சுதந்திர உணர்வு தோன்றுவதாகவும், அதிக சக்தி கிடைப்பதாகவும், களைப்பு நீங்குவதாகவும் பலர் நினைக்கின்றார்கள். இளமைப் பருவத்தில் மதுவால் அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை என்றாலும் பிற்காலத்தில் மதுவினால் பாதிப்புகள் ஏராளம். மது நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுவதால் மது குடித்தவுடன், சிறிது நேரத்திற்கு உற்சாகம் பிறக்கிறது. மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் நாளடைவில் எல்லா நோய்களையும் கொடுத்து சிறிது சிறிதாக நம்மை அழிக்கிறது.

மதுவின் தீமைகளை உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் "மது நீண்ட நாளைய நலக்கேடு என்றும், தீய செயல்" என்றும் கூறுகிறது. மது உடல் நலத்தைக் கெடுப்பதோடு சமுதாயச் சீர்கேடுகளையும் ஏற்படுத்துகிறது.

ஏழைகள், கூலித் தொழிலாளர்கள், கடின உழைப்பாளிகள், கவலைப்படுகின்றவர்கள், மன நிம்மதி இழந்தவர்கள் போன்றவர்களே, அதிகம் மது அருந்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. சந்தோசத்திற்காக குடிக்க ஆரம்பித்தவர்கள் பிறகு மதுவிற்கு அடிமையாகி விடுவதோடு குடும்பத்தையும் துயரத்தில் ஆழ்த்தி விடுகின்றார்கள். குடிப் பழக்கம் உள்ள வீட்டுக் குழந்தைகளும் நாளடைவில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி கெட்டுப் போகும் நிலை ஏற்படுகிறது.
 
எனவே இளம் குடும்பங்களை சின்னாபின்னமாக்கி, சமூகத்தை சீரழிக்கும், இளைஞர்களைப் பலியெடுக்கும் மது அரக்கனை அழிப்போம்.

குடிகாரர்களை குணமுள்ள மனிதர்களாக, மதுவுக்கு அடிமையான இளைஞர்களை மதியுள்ள துடிப்பான சாதனையாளர்களாக மாற்ற திடசங்கற்பம் பூணுவோம்.