இலங்கையின் தேசிய உற்பத்தியில் கணிசமானளவு வருவாயைப் பெற்றுத்தந்த சுற்றுலாத்துறை தற்பொழுது வீழ்ச்சி கண்டுள்ளதனால் அவற்றை மேம்படுத்துவதற்கு ஸ்ரீ லங்கா அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அமைச்சரவை அனுமதியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.
குறிப்பாக 4.5சதவீத பங்களிப்பினை நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் வழங்கிவந்த சுற்றுலாத்துறை கடந்த பயங்கரவாத தாக்குதலின்பின்னர் பெரும் தாக்கத்திற்குள்ளாகியிருக்கின்றது.
இதற்கு முக்கிய காரணமாக, வெளிநாட்டுப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிநிலையே என தெரிவிக்கப்படும் நிலையில் மீண்டும் இலங்கைக்கான விமானங்களைக் கவரும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இலங்கையை வெளிநாட்டு விமானங்கள் கவரக்கூடிய வகையில் இலங்கையில் விமான நிறுவனங்களுக்காக வழங்கப்படும் எரிபொருள் உள்ளிட்ட தரையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஏனைய சேவைகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை குறைக்குமாறு சிறிலங்கன் விமான நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்குதல் இதன் முக்கிய திட்டமாக சொல்லப்பட்டுள்ளது.
மேலும், சென்னை விமானநிலையத்தில் உள்ள விமான எரிபொருள் விலைக்கு சமமான வகையில் விமான எரிபொருளின் விலையை குறைக்குமாறு இலங்கை கனியவள பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ஆலேசனை வழங்கப்படுவதும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாடு செல்லும் சந்தர்ப்பத்தில் செலுத்தப்பட வேண்டியுள்ள வரியை 10 அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதை இடை நிறுத்துவதும் இதன் முக்கிய ஏற்பாடாக கூறப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மீண்டும் இலங்கையில் வெளிநாட்டு விமானங்களை அதிகளவில் தரையிறங்கவைப்பதுடன் சுற்றுலாதாரிகளை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
இதற்காக, தேசிய கொள்கை, மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரையை 6 மாத காலத்துக்கு நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
செய்திகள் 09.07.2019