ஈவினை பகுதியில் குருக்கள் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றவர்கள் கைது

 ஈவினை பகுதியில் குருக்கள் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றவர்கள் கைது

யாழ், புன்னாலைகட்டுவன், ஈவினை பகுதியில் குருக்கள் ஒருவரின் மனைவியை கட்டிவைத்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்ற மூன்று சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.

ஆலயப் பணிகளை மேற்கொள்வதற்காக, குருக்கள் சென்றிருந்த வேளையில், அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ள நான்கு நபர்கள், குருக்களின் மனைவியை கட்டிவைத்துவிட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதன்போது, குருக்கள் மனைவி கூக்குரலிடவே கொள்ளையர்கள் தப்பித்து ஓட முயன்றுள்ளனர். கூக்குரல் சத்தம் கேட்டு அங்கு ஒன்றுகூடிய அயலவர்கள், தப்பித்து ஓடிய கொள்ளையர்களில் மூவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.