உலக சுற்றுச்சூழல் தினம் இன்றாகும்

   உலக சுற்றுச்சூழல் தினம் இன்றாகும்

நாம் வாழும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி, உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. “சுற்றுச்சூழலை பாதுகாக்க குரலை உயர்த்துங்கள்; கடல் நீர்மட்டத்தை உயர்த்தாதீர்கள்’ என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து.

நமது வருங்கால சந்ததியினர் நலமாக வாழவேண்டும் எனில், சுற்றுச்சூழலை பாதுகாப்பது கட்டாயம்.

நமது வீடுகளில் மட்டுமல்ல, உலக மக்கள் சேர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். வெப்பநிலை உயர்வு, பருவநிலை மாற்றம், கழிவு மேலாண்மை, இயற்கை வளங்களை குறைந்தளவில் பயன்படுத்துதல், இயற்கை பேரழிவு முன்னெச்சரிக்கை போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

 

பருவநிலை மாற்றம் சுகாதாரம், உணவு உற்பத்தி, சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 100 ஆண்டுகளில், பூமியின் சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி உயர்ந்துள்ளது. இதனால் கடல் நீர்மட்டம் 10 முதல் 25 செ.மீ., உயர்ந்துள்ளது. இந்த வெப்பநிலை உயர்வுக்கு 85 சதவீதம் காபனீரொக்சைட் வாயு அதிகரித்ததே காரணம்.

மனிதனின் அன்றாட வாழ்க்கை முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் (அதிகரித்த குளிர்பதன பெட்டி, மின்சாரம் தயாரிப்பு முறைகள், நிலக்கரி மற்றும் எரிவாயு பயன்பாடு, மீத்தேன் வாயு அதிகரிப்பு ஆகியவை) காரணமாக காபனீரொக்சைட் அளவு அதிகரித்துள்ளது.

புவி வெப்பமடைவதால் ஆர்க்டிக் மற்றும் அந்தாட்டிக்கா பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. கடல் நீர் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகள் மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால் புயல்களின் பாதிப்பும் அதிகமாக இருக்கும். கடலோர பகுதிகள் பாதிக்கப்படும்.

வெப்பநிலையால் கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன. மீன்வளம் பாதிக்கப்படுகிறது. மழைப்பொழிவில் மாற்றம் ஏற்படுவதால் உணவுப்பொருள் உற்பத்திக்கு தட்டுப்பாடு ஏற்படும். வரும் ஆண்டுகளில் ஆசியாவில் உணவுப்பஞ்சம் அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

வீடு, அலுவலகம், வணிக வளாகம் மற்றும் பொது இடங்களில் அன்றாடம் உருவாகும் கழிவுகள், முறையாக மேலாண்மை செய்யப்படாததால், அவை சுற்றுச்சூழலின் பெரிய எதிரியாக உருவாகியுள்ளன. 2025ம் ஆண்டில் உலக மக்கள்தொகை 800 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப கழிவுகளின் அளவும் அதிகரிக்கும்.

2005ல் இருந்த கழிவுகளின் அளவு 2025ல் 44 சதவீதம் அதிகரிக்கும் என ஐ.நா., தெரிவிக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன் நகரங்களில் 290 கோடி மக்கள் இருந்தனர். அப்போது ஒரு நபர் ஒரு நாளைக்கு 0.64 கிலோ கழிவுகளை வெளியிட்டனர். தற்போது நகரங்களில் 300 கோடி மக்கள் உள்ளனர்.

ஒரு நபர் ஒரு நாளைக்கு 1.2 கிலோ கழிவுகளை வெளியிடுகின்றனர். மொத்தமாக ஆண்டுக்கு 130 கோடி டன்னிலிருந்து, 220 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.

 

பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு பசுங்குடி வாயுக்கள் அவசியம். இவை இல்லை என்றால், பூமியின் வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் குறைவாகவே இருக்கும்.

அப்போது எல்லாம் உறைந்து போய், உயிரினங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். பூமியின் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஒரு போர்வை போல சேர்ந்து இருக்கும் பசுங்குடில் வாயுக்கள் (நீராவி, காபனீரொக்சைட், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்ட வாயுக்கள்) சூரிய வெப்பத்தை பூமிக்குள் அனுமதிக்கின்றன.

தொழிற்சாலைகள் இந்த வாயுக்களை அதிகம் வெளியிடுவதால், பூமியின் மேற்பரப்பில் இருந்து எதிரொளிக்கப்படும் வெப்பத்தை, (அகச்சிவப்பு கதிர்களை) விண்வெளிக்கு அனுமதிக்காமல் தடுத்து, பூமிக்கே திரும்ப இவை (பசுங்குடில் வாயுக்கள்) திருப்பி அனுப்புகின்றன. இதனால் பூமி கூடுதல் வெப்பமடைகிறது.

ஆகவே, உலக சுற்றுச் சூழல் தினமான இன்று மாசில்லா அழகிய பூமியை எதிர்கால சந்ததிக்கு கையளிக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி பூணுவோம்.