எண்ணங்களே வெற்றியை தரும்

எண்ணங்களே வெற்றியை தரும்

வியாபாரத்தில் ஜெயித்தவர்கள் பெரும்பாலும் பல தோல்விகளுக்கு பிறகு தான் வெற்றியை ருசித்திருப்பார்கள். குறிப்பாக, முதல் முறையாகத் தொழில் செய்பவர்கள் நிறைய தோல்விகளையும் தடைகளையும் சந்திப்பது இயல்பு. ஒரு முறை தோல்வி வந்ததும் நம்மால் முடியாது என்று விலகிச் செல்பவர்கள் ஏராளம். நம்மைச் சுற்றிப் பார்த்தாலே சொந்தத் தொழில் பரிசோதனையைச் செய்து பார்த்துவிட்டு வந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். தங்களின் தோல்விகள் பற்றி அவர்கள் சொல்லும் போதே அவர்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்து கொள்ளலாம்.

“அந்தத் தொழில் மோசமான தொழில், தெரியாம மாட்டிக்கிட்டேன்”, “கூட்டாளிகளை நம்பி ஏமாந்தேன் !”, “ நம்ம குணத்துக்கு அந்தத் தொழில் செட் ஆகாது”, “நிலையான வருமானம் இல்லாட்டி ரொம்பக் கஷ்டம்”, “நம்ம குடும்பத்துக்கெல்லாம் பிஸினஸ் ஆகாது”, “இந்த தொழில்னாலே வேறெங்கும் நகர முடியாது. எதுவும் செய்ய முடியாது. இதே கதின்னு கிடக்கணும் !” இது போன்ற ஏராளமான வார்த்தைகள் அவர்களிடமிருந்து வரும். நீங்கள் எதை நினைத்தாலும் அது தான் சரி என்று உணர்த்தவது போல உங்கள் வாழ்க்கையில் அனுபவங்கள் கிடைக்கும். உங்கள் எண்ணத்தைக் கவர்ந்துவரும் மனிதர்களும் சம்பவங்களும் அதைத் தொடர்ந்து நிரூபிப்பார்கள். அது தான் எண்ணங்களின் வலிமை.

தொழில் செய்வதை, பிடித்த விளையாட்டை விளையாடுவது போல அணுகுபவர்கள் அதை ரசித்து செய்வார்கள். விளையாட்டில் வெற்றி தோல்வி எப்படி என்பதை விட, விளையாட்டை விளையாட்டுக்காகவே எப்படி ரசிக்கிறோமோ அப்படித் தொழிலை ரசிக்க வேண்டும். அது தான் நம்மை அந்தத் தொழிலில் நிலைக்க வைக்கும். தோல்வியால் கற்கும் பாடங்கள் நமது தொழில் திறனைக் கூர்மையாக்கும் என்று நம்ப வேண்டும். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதை விட எப்படி ஜெயிப்பது என்பதைத் தோல்வியில் தான் ஆராய்ந்து கற்க முடியும். பிறரின் தோல்விகளிலிருந்து பாடம் கற்பவர்கள் புத்திசாலிகள்.