எயர் ஏசியா விமான விபத்துக்கு காரணம் அறிவித்தது இந்தோனேசிய அரசு

எயர் ஏசியா விமான விபத்துக்கு காரணம் அறிவித்தது இந்தோனேசிய அரசு

வானிலை ஏர்ஏசியா விமான விபத்துக்கு காரணமாக இருக்கலாம் இந்தோனேஷியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

162 பேருடன் இந்தோனேஷியாவின் சுரபவாவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச்சென்ற ஏர் ஆசியா ‘ஏ320–200’ ஏர் பஸ் விமானம், நடுவானில் கடந்த 28–ந்தேதி திடீரென மாயமானது. இந்த விமானம் இந்தோனேஷியாவின் ஜாவா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது. ஜாவா கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இது வரை 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள இந்தோனேஷிய போர்க்கப்பல் ஒன்று, சோனார் என்னும் ஒலி அலைகள் மூலமாக கண்டறியும் முறையின்கீழ் விமானத்தின் 2 பெரிய பாகங்களை கடலுக்கு அடியில் கண்டுபிடித்துள்ளது. இதில் ஒரு பாகம் 9 மீட்டர் நீளமும், இன்னொரு பாகம் 7 மீட்டர் நீளமும் கொண்டவை, உலோகத்தால் ஆனவை என தெரிய வந்துள்ளது. இவற்றை படம் எடுக்க, ஆர்.ஓ.வி. என்னும் தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் நீருக்கு அடியில் செல்லும் வாகனம் மூலம் முயற்சி நடக்கிறது. பெரும்பாலான பயணிகள் சீட் பெல்ட் அணிந்திருந்ததால், அவர்களது உடல்கள் விமானத்தின் உடல் பகுதியுடன் சிக்கியிருக்கும் என கூறப்படுகிறது.

ஜாவா கடல் பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வானிலை மோசம் காரணமாக மீட்பு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. இதற்கிடையே சிங்கப்பூர் நாட்டின் மீட்பு குழு மற்றொரு சடலத்தை மீட்டுள்ளது. ஆனால் சடலம் ஆணா இல்லை பெண்ணா என்பது தெரியாத நிலையில் உள்ளது என்று செய்தி சேனல் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தோனேஷியா தேடுதல் மற்றும் மீட்பு குழு விமானத்தின் 5-வது பெரிய பாகத்தை கண்டுபிடித்துள்ளது. இன்று காலை கடலுக்கு அடியில் மீட்பு குழுவினர் விமானத்தின் பகுதியை கண்டுபிடித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள் சிக்குவதற்கு வானிலையே காரணமாக இருக்கலாம் என்று இந்தோனேஷியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விமானம், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த இடத்தில், அந்நேரத்தில் புயல் வீசியது என்று இந்தோனேஷியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை இந்த அபாயகரமான விபத்திற்கு ஒரு தூண்டு காரணியாக இருந்திருக்கலாம், ஐஸ் காரணமாக விமானத்தின் கருவிகள் குளிர்ந்துபோய் செயல்படாமல் போயிருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்கையின் மீது ஐஸ் படிந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இருப்பினும் இதனை தவிர்ப்பதற்கு விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விமானத்தை உயர்த்த அனுமதி மறுப்பு

ஜாவா கடல் பகுதியில் 32 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது அடர்த்தியான மேகங்கள் காரணமாக விமானத்தை 38 ஆயிரம் அடி உயரத்தில் அனுமதிக்கும்படி விமானி தரைக்கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு கேட்டு இருக்கிறார்.

ஆனால், அந்த பகுதியில் எந்த நேரமும் தொடர்ந்து விமானங்கள் பறந்தவாறே இருக்கும் என்பதால் இதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த 5 நிமிடங்களில் விமானம் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை விமானம் இழந்துள்ளது. இந்த தகவலை இந்தோனேஷிய விமான நிலைய அதிகாரி ஒருவரும் உறுதி செய்தார். விமானம் பெலிதுங் தீவு பகுதியில் தென்கிழக்கு தன்ஜூங் பாண்டன் பகுதியில் 100 கடல் மைல் தொலைவில் இருந்த வரை அதன் நிலை தெரிந்து உள்ளது. அதன்பிறகுதான் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்று கூறப்பட்டது.

விமானி விமானத்தை உயர்த்த அனுமதி கேட்ட பின்னர், ஜாகார்த்தா விமான கட்டுப்பாட்டு மையம் எழு மயில் தூரம் 34 ஆயிரம் அடி உயரத்திற்கு விமானத்தை கொண்டு செல்ல அனுமதித்ததாகவும், ஆனால் விமானத்தில் இருந்து எந்தஒரு பதிலும் வரைவில்லை என்றும் விமானம் காலை 6;18 மணிக்கு முன் மறைந்தது ஏடிசி ராடார் மூலம் கண்டறியப்பட்டது.

ஏற்கனவே இது தொடர்பாக வளைகுடா விமானி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘கடலில் இருந்து மீட்கப்பட்ட ஒருவரது உடலில் உயிர் காப்பு சட்டை இருந்தது என்பதை வைத்து பார்க்கும்போது, விமானம் முதலில் செயலிழந்திருக்க வேண்டும். அதன்பின்னரே கீழே வந்திருக்க வேண்டும். கருவிகள் குளிர்ந்துபோய், விமானிகளுக்கு தவறான தகவல்களை தந்திருக்க வாய்ப்பு உண்டு’ என்றார் என்பது குறிப்பிடதக்கது.