கலாபூஷணம் சின்னமணி இன்று அதிகாலை காலமானார்!

கலாபூஷணம் சின்னமணி இன்று அதிகாலை  காலமானார்!

உலகத் தமிழரிடையே நீங்கா இடம்பிடித்த வில்லிசைக் கலைஞரான கலாபூஷணம் நா.கணபதிப்பிள்ளை (சின்னமணி) அவர்களின் குரல் இன்று அதிகாலை ஓய்ந்தது. இறக்கும்போது அவரின் வயது 78 ஆகும்.

நடிப்பு, நடனம், வில்லிசை என அனைத்துக் கலைகளிலும் சிறந்துவிளங்கிய சின்னமணி அவர்கள் இலங்கை, இந்தியா என அனைத்துத் தமிழ்மக்களாலும் நன்கு அறியப்பட்டவராவார். தமிழரின் மரபுவழிக் கலையான வில்லிசையில் தனக்கென ஓர் தனிமுத்திரை பதித்த இவர் புகழ்பெற்ற திரைப்பட நடிகரும் வில்லிசையாளருமான கலைவாணர் ...என்.எஸ்.கிருஷ்ணனின் மாணவராவார். அதனாலேயே தனது வில்லிசைக் குழுவிற்கு தன் குருவின் பெயரைச் சூட்டினார். தனது முதலாவது வில்லிசை அரங்கேற்றத்தை 1968இல் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் அரங்கேற்றியதிலிருந்து இன்றுவரை வில்லிசையென்றால் அது சின்னமணிதான் என உலகத்தமிழர் வியக்கும் வகையில் சிறந்து விளங்கினார். இதுவரை உலகமெங்கணும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வில்லிசை அரங்கேற்றத்தினை நடத்தி பல்வேறு பட்டங்களைப் பெற்றார்.

நடிப்புத் துறையிலும் சிறந்துவிளங்கிய இவர் 'துப்பதாகே துக்க' எனும் சிங்களத் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். அதன்பிறகு தமிழ் மரபுவழிக் கூத்துக்களிலும் நாடகங்களிலும் அளப்பரிய பங்காற்றினார். சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் இயமன் வேடத்தில் நடித்துவந்த இவரது அதிசிறந்த நடிப்பால் நாடகத்தைக் காணவந்த மக்களிடையே இருந்து குழந்தைகளின் வீரிட்டு அழுகின்ற குரல் கேட்குமாம்.

சில நாட்களின்முன் கீழே விழுந்து தலையில் ஏற்பட்ட உபாதை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே இன்று அதிகாலை சாவடைந்துள்ளார்.

அன்னாரின் இழப்பென்பது ஈழத்தமிழ்க் கலையுலகின் யாராலுமே ஈடுசெய்யமுடியாத ஒன்றாகும்.