கழிவு ஒயில் இடர் வலயம் பிரகடனப்படுத்தினால் பாதிப்பு

கழிவு ஒயில் இடர் வலயம் பிரகடனப்படுத்தினால்  பாதிப்பு

 

கழிவு ஒயில் குடிதண்ணீருடன் கலந்துள்ளது என்று சந்தேகிக்கப்படும் பிரதேசங்களை, "இடர் வலயம்' என்று பிரகடனப்படுத்தினால், அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் வசிக்க முடியாது. 

 
அத்துடன் அந்தப் பிரதேசம், பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில், மேற்பார்வையிலேயே இருக்கும். மேலும் அவ்வாறு, "இடர் வலயம்' எனப் பிரகடனப்படுத்துவதற்குச் சில பொறி முறைகள் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட துறைசார் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
சுன்னாகம் பிரதேச்தில் கழிவு ஒயில் குடிதண்ணீருடன் கலந்துள்ள மையினால், வலிகாமம் பிரசேத்தின் 60 கிராம சேவையாளர் பிரிவுகள் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. இந்தப் பகுதிகளை 'இடர் வலயம்' என்று பிரகடனப்படுத்தவேண்டும் எனப்பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். அவ்வாறு பிரகடனப்படுத்து வதற்கு உரிய ஒழுங்கு முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
 
மனித உயிர் இழப்பு நடந்திருக்க வேண்டும் (அவசரகால நிலை பிர கடனப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்), சொத்திழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும், சுற்றுச்சூழல் இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். இவை மூன்றும் நடந்திருப்பதுடன், தண்ணீர் பாதிப்பை ஈடு செய்ய முடியாத நிலைமை காணப்பட வேண்டும். 
 
அதாவது பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்ய இயலாது காணப்பட வேண்டும். இவ்வாறு இருப்பதுடன், இந்த விடயங்கள் தொடர்பில் கிராம, பிர தேச, மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் அனுமதி பெற்று, தேசிய சபைக்கு சமர்பிக்கப்பட வேண்டும். ஆனாலும், யாழ். மாவட்டச் செயலகத்தினால், கிராமமட்ட அமைப்புக்கள், தொழிற் சங்கங்கள் விடுத்த கோரிக்கை தேசிய சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, குறித்த பிரதேசத்தை "இடர் வலயம்' எனப் பிரகடனப் படுத்தினால், அந்தப் பகுதியில் மக்கள் வாழ முடியாது. மேலும், குறித்த காணிகளுக்குரிய நஷ்ட ஈடு காலப்போக்கில் வழங்கப்படும். அத்துடன் குறித்த பகுதியை, பாதுகாப்புத் தரப்பினரே பொறுப்பேற்பார்கள். இவ்வாறான நிலைமை ஏற்படும், என்றும் சம்பந்தப்பட்ட துறைசார் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.