குறுந்தூர ரயில் சேவை ஒன்று இன்று ஆரம்பம்

குறுந்தூர ரயில் சேவை ஒன்று இன்று ஆரம்பம்
யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கிடையே குறுந்தூர ரயில் சேவை ஒன்று இன்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். ரயில் நிலைய பிரதம அதிபர் பிரதீபன் தெரிவித்தார். 
 
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
இன்று காலை 6.05 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து ஆரம்பமாகிய இச் சேவை தினமும் இரண்டு தடவைகள் யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கும் இடையே இடம்பெறவுள்ளது.
 
இவ்வாறு காலை 6.05 மணிக்கு புறப்படும் ரயில் காலை 7.39 மணிக்கு கிளிநொச்சி ரயில் நிலையத்தை சென்றடையும். அங்கிருந்து 8.05 புறப்படும் ரயில் முற்பகல் 10.08ற்கு யாழ். நிலையத்தை வந்தடையும்.
 
மீண்டும் மாலை 4 மணிக்கு யாழில் இருந்து புறப்படும் ரயின் மாலை 5.35 மணிக்கு கிளிநொச்சியை சென்றடையும். மீண்டும் கிளிநொச்சியில் இருந்து மாலை 5.55 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 7.52 மணிக்கு யாழ்.நிலையத்தை வந்தடையும்.
 
இச் சேவையில் மூன்றாம் வகுப்பு ஆசனங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது என்றும் யாழில் இருந்து கொடிகாமத்திற்கு 30 ரூபாவும், கிளிநொச்சிக்கு 90 ரூபா அறவிடப்படும்.
 
அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்தவர்களதும் பாடசாலை மாணவர்களது போக்குவரத்து நன்மை கருதியே குறித்த ரணில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
 
மேலும் யாழில் இருந்து கிளிநொச்சி வரையுள்ள அனைத்து தரிப்பு நிலையங்களிலும் குறித்த ரயில் தரித்துச் செல்லவுள்ளது.
 
அத்துடன் எதிர்காலத்தில் பருவச்சீட்டு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எனவே விரைவில் பயணச்சீட்டும் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.