சிறப்பாக நடைபெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்

சிறப்பாக நடைபெற்ற  மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவில் இன்று சனிக்கிழமை தீர்த்தத் திருவிழா இடம்பெற்றது. கீரிமலை கண்டங்கி தீர்த்தத்தில் சுவாமி காலை 7.30 மணியளவில் எழுந்தருளி தீர்த்தமாடினார்.

காலை 6 மணியளவில் மாவிட்டபுரத்தில் இருந்து அடியவர்கள் புடைசூழ ஊர்வலமாகச் சென்ற ஷண்முகப் பெருமான், கீரிமலை நகுலேஸ்வரத்தை அடைந்தார்.

கீரிமலை சிவன் கோயிலிலிருந்து, சிவன், பிள்ளையார், முருகன் ஆகியோரும் எழுந்தருள, அங்கிருந்து கடல் தீர்த்தமாட ஷண்முகப்பெருமான் புறப்பட்டார்.

நகுலேஸ்வரத்தில் வளர்க்கப்படும் காளை மாடு முன்னே செல்ல அதனைத் தொடர்ந்து சுவாமி எழுந்தருளினார். உள்நாட்டில் இருந்து மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தீர்த்தோற்சவத்தில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.