சுத்தமான தண்ணீர் தட்டுப்பாடு பாரிய நெருக்கடியாக உருவாகிறது

 சுத்தமான தண்ணீர் தட்டுப்பாடு  பாரிய நெருக்கடியாக உருவாகிறது

யாழ். குடாநாட்டில் சுன்னாகம் பகுதியில் கழிவு எண்ணெய் கசிவினால் குடிநீர் மாசடைந்து அப்பிராந்திய மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையும் கடும் வரட்சி அடிக்கடி ஏற்படுவதால் உலர் வலயங்களில் வாழ்வோர் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளும் நீடித்து வரும் நிலையில் சுத்தமான நீருக்கு ஏற்படவிருக்கும் தட்டுப்பாடு உலகளாவிய  நெருக்கடியாக உருவாகப் போகிறது என்றதொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இயற்கையின் சகல ஒழுங்கு நிலைக்கும் உந்து சக்தியாக அமைவது தண்ணீரே என்று இத்தாலியின் புகழ்பெற்ற ஓவியக்கலைஞர் லியோனார்டோ டாவின்சி சுமார் 5 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறியிருந்ததாக மேற்கோள்காட்டப்படுவதுண்டு.

ஆனால் நாம் வாழும் பூமியில் நீருக்குத் தட்டுப்பாடு அதிகளவில் ஏற்பட்டு வருவதை தற்போது அவதானிக்க முடிகிறது. உலக சனத்தொகை 700 கோடிக்கும் மேலாக அதிகரித்துள்ள நிலையில் சுத்தமான நீர் கிடைப்பனவு அதிகரிக்கவில்லை. இதனால் ஏற்பட்டு வரும் பிரச்சினைகள் ஆழமானவையாகும்.

உலகின் பல பாகங்களில் நீர்நிலைகள் வரட்சியடைந்து வருவதாக செய்திகள் வெளிவருகின்றன. 100 கோடிக்கும் மேற்பட்டோர் அதாவது உலக சனத்தொகையில் 7 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில்  பாதுகாப்பான குடிநீரின்றி அவதியுறுகின்றனர்.

கடந்த வாரம் பிரேஸிலிலுள்ள சாவோ போலோ நகரில் உள்ள மக்கள் நிலத்தடி நீரைப் பெற்றுக் கொள்ள வீடுகளின் அடித்தளங்கள், வாகனத் தரிப்பிடத் தளங்களை தோண்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 கோடி சனத்தொகையைக் கொண்ட  அந்த நகர மக்களுக்கு வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே நீர் விநியோகம் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெயிலும் பார்க்க நீரே அதிகளவுக்கு முக்கியமானதாக காணப்படுகிறது. தெற்காசியாவில் நிலத்தடி நீர் அதிகளவுக்கு இழக்கப்படுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இப்பிராந்தியத்தில் 75 சதவீதமான விவசாயிகள் பயிர்ச் செய்கைக்கு நிலத்தடி நீரையே பயன்படுத்துகின்றனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடுமையான தாக்கங்களை உலகம் அதிகளவுக்கு உணர்ந்து வருகின்றது. இயற்கை வளங்களைப் பகிர்ந்து கொள்ளும் போட்டிகளால் மோதல்கள் அதிகளவுக்கு ஏற்படுமென எச்சரிக்கப்படுகிறது.

கடும் வரட்சியால் எதிர்காலத்தில் இந்த மோதல்கள் உக்கிரமடையுமென எதிர்வு கூறப்படுகிறது. பூமியின் ஒரு பகுதியில் கடும் மழை வீழ்ச்சியால் பாதிப்பு ஏற்படும் அதேசமயம் ஏனைய பகுதிகள் மோசமான வரட்சியால் தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அபாயம் காணப்படுகிறது.

அதேவேளை காலநிலை மாற்றத்தால் தண்ணீரின் தரம் பாதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. வெப்பநிலை அதிகரிப்பும் படிவுகளின் மட்டம் அதிகரித்தல்,  மாசடைதல் என்பன கடும் மழை வீழ்ச்சியாலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. “தண்ணீர் தட்டுப்பாட்டால் எதிர்காலத்தில் அரசியல் ரீதியான தாக்கங்கள் ஏற்படக்கூடும்.

கடந்த காலத்தில் பயன்படுத்தியதைப் போன்று நீரைத் தொடர்ந்தும் பயன்படுத்துவோமானால் எதிர்காலத்தில் மனிதத்துவம் நீடித்து நிலைத்திருக்காது’ என்று காலநிலை மாற்றம் தொடர்பான இடைக்கால நடவடிக்கைக்கான பேரவையின் தலைவரும் கனடாவின் முன்னாள் பிரதமருமான ஜேன் செரியன் கூறியிருக்கிறார்.

இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் கடும் வரட்சி, வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போதெல்லாம் பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால நிவாரணங்களை வழங்கிவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகாத நிலைமையே பெரும்பாலும் காணப்படுகிறது.

சுத்தமான குடிநீர் தட்டுப்பாடும் நிலத்தடி நீர் மாசடைந்தமையுமே வட மத்திய மாகாணத்தின் சில பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் சிறுநீரக கோளாறு போன்ற கடுமையான வியாதிகள் ஏற்படுவதற்கு காரணமென மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். சுன்னாகம் பகுதியில் கழிவு எண்ணெய் பிரச்சினை செயற்கையானதொன்று என்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.

சனத்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப இயற்கை வளங்கள் அதிகரிப்பதில்லை. இந்நிலையில் பாதுகாப்பான நீரைப் பெற்றுக் கொள்வதற்கு பெரும் பிரச்சினையை எதிர்கொள்ளும் நிலைமை காணப்படுகிறது.

கடல் நீரை ஆவியாக்கி வடிகட்டி தூய்மையான நீரைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் சில வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளன.

அதற்கான செலவு அதிகமாக இருக்கின்ற போதும் நீரின் முக்கியத்துவம் கருதி இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ முடியும்.

எதிர்காலத்தில் வரவிருக்கும் நெருக்கடி குறித்து காலநிலை மாற்றம் தொடர்பான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு எச்சரித்திருக்கும் நிலையில் பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கங்கள் முன்கூட்டியே மேற்கொள்வது அவசியம்.