சுன்னாகம் இராமநாதன் கல்லூரி நூலகம் சிறந்த பாடசாலை நூலகமாகத் தெரிவு

சுன்னாகம் இராமநாதன் கல்லூரி நூலகம் சிறந்த பாடசாலை நூலகமாகத் தெரிவு

யாழ். சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரி நூலகம் தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள்; சபையினரால் சிறந்த பாடசாலை நூலகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (28.10.2014) கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் வைத்து குறித்த விருது வழங்கப்படுகிறது. இவ் விருதினைப் பெறுவதற்காக கல்லூரியின் அதிபர் திருமதி.கமலராணி கிருஸ்ணபிள்ளை மற்றும் நூலகப் பொறுப்பாளர் திருமதி.காஞ்சனாமாலா உதயகுமாரன் ஆகியோர் கொழும்பு சென்றுள்ளனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் சிறப்பாகச் செயற்பட்டமைக்காக இராமநாதன் மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள நூலகத்திற்கு இவ் விருது கிடைத்துள்ளது.

நூறாண்டுகள் பழமை வாய்ந்த இராமநாதன் மகளிர் கல்லூரி நூலகம் நாட்டில் அசாதாரண நிலைமை தொடர்ந்ததுடன் இராணுவ நடவடிக்கைகளும் தொடர்ந்தமையால் பல தடவைகள் இடம்பெயர்ந்தவர்கள் தங்குமிடமாகவும் இராணுவத்தினரின் தங்குமிடமாகவும் மாறியது. 95 ஆம் ஆண்டு இடம்பெயர்வின் பின்னர் நூலகம் சின்னாபின்னமாக மாறியது.

எனினும் 2010 ஆம் ஆண்டின் பின்னர் சுமூகமான நிலை காணப்படுவதால் நூலகம் சொந்தக் கட்டடத்தில் வளப் பற்றாக்குறைக்கு மத்தியிலும் சிறப்பாக இயங்கி வருகிறது. தற்போது ஆயிரக் கணக்கான நூல்களுடன் குறித்த நூலகம் இயங்கி வரும் நிலையில் தினமும் சுமார் 400 வரையான மாணவிகள் இந் நூலகத்தைப் பயன்படுத்துவதாக நூலகப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந் நூலகத்தில் சேர்.பொன்.இராமநாதன் எழுதிய நூல்களுடன் திருமதி.இராமநாதன் எழுதிய நூல்களும் காணப்படுகின்றன. அத்துடன் நூலகம் தோன்றுவதற்குக் காரணமாகவிருந்த சேர்.பொன்.இராமநாதன் பயன்படுத்திய சில பொருட்களும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.