நீர்மாசடைதல் தொடர்பான செயற்றிட்டங்கள் துரிதப்படுத்த கோரிக்கை

  நீர்மாசடைதல் தொடர்பான செயற்றிட்டங்கள் துரிதப்படுத்த கோரிக்கை

யாழ்.சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீர் மாசடைதல் தொடர்பாக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்களை துரிதப்படுத்துவதற்கு வடமாகாண சபை முதலமைச்சருக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக, யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் தலைவர் வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் சனிக்கிழமை (28) தெரிவித்தார் இது தொடர்பாக அவர் வடமாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

கடந்த வருடம் சுன்னாகம் மற்றும் அதன் அயற் கிராமங்களில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் பரவிவருவது பற்றி எனது கவனத்துக்கு  கொண்டு வரப்பட்ட போது, சுகாதார அமைச்சின் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அறிவித்ததுடன் இவ்விடயம் தொடர்பில் உண்மை நிலையைக் கண்டறிவதற்காக அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பிரதேச நீர் மாதிரிகளை சேகரிப்பதற்கும் ஏற்பாடுகளைச் செய்திருந்தேன்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமையை அவதானித்தேன். மேலதிகமாக கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் யாழ்ப்பாண மருத்துவச் சங்கத்தின் வருடாந்த செயலமர்வில் யாழ். குடாநாட்டில் குடிநீரில் கழிவு எண்ணெய் பரவி வருவதால் ஏற்படும் பாதிப்புக் குறித்து தொடர்புடைய பங்குதாரர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் அழைத்து பகிரங்கக் கருத்தமர்வை ஒழுங்கு செய்து துறைசார் நிபுணர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பங்கு பற்றிய அனைவருக்கும் வழங்கி அதிகரித்து வரும் இந்தப் பிரச்சினை தொடர்பாக தெளிவூட்டி இருந்தோம்.

அதேவேளை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் 2012- 2014 காலப் பகுதியில் சுன்னாகம் பகுதியில் செய்யப்பட்ட ஆய்வும் வெளியாகியிருந்தது. இந்த ஆய்வில் சுன்னாகம் மின்நிலையத்துக்கு  அயலில் உள்ள கிணறுகள் பெற்றோலியக் கழிவுகளினாலும் ஆபத்தான நச்சுத் தன்மை வாய்ந்த ஈயம் முதலான பார உலோகங்களாலும் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதை தொடர்ந்து நானும் என்னுடைய சக ஆராய்ச்சியாளர்களும் மேற்கொண்ட நோய் பரவலியல் ஆய்வு சுன்னாகம் மின்னுற்பத்தி நிலைய வளாகப் பகுதியில் இருந்தே இந்த நச்சுப் பொருட்கள் பரவுவதுக்குரிய மேலதிக ஆதாரத்தை வழங்குவதுடன், இந்தப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் போன்ற ஏனைய மூலங்களில் இருந்து பரவி இருக்கலாம் என்ற வாதங்களை மறுதலித்துள்ளது.

அரச பகுப்பாய்வாளர்களின் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கும் இவ்வேளை பின்வரும் விடயங்களை தங்களின் மேலான கவனத்துக்கும்; விரைவான செயற்பாட்டுக்குமாக முன்மொழிகின்றேன்.

ஆபத்தான நச்சுப் பதார்த்தங்கள் கொண்ட எண்ணெய்க் கழிவுகள் புதைக்கப்பட்டுள்ள இடங்களை அடையாளம் கண்டு அவற்றைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவேண்டும்.

சுன்னாகம் மின்சாரசபை வளாகத்தில் பாரிய குளம் போல எண்ணெய் கழிவுகள் 2012இல் இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. எனினும் இந்த எண்ணெய்க் கிணறுகள் சடுதியாக மாயமாகி உள்ளன. இலங்கை மின்சாரசபையும் அதன் உப உற்பத்தி நிறுவனங்களும் எவ்வாறு இது சடுதியாக மாயமாக மறைந்தது என்பதற்குரிய விளக்கத்தை வழங்குவதுடன் எமது ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது போல் தொடர்ந்தும் எவ்வாறு அதே இடத்தில் இருந்து இந்த நச்சுக் கழிவுகள் பரவுகிறது என்பதற்குரிய பதிலையும் வழங்க வேண்டும்.

நச்சு உலோகமான ஈயம் கலந்திருப்பதாக அடையாளம் காணப்பட்ட கிணறுகள் சகலவித பாவனையில் இருந்தும் நிறுத்தப்பட்டு சீல் செய்யப்பட வேண்டும். தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் 50 கிணறுகளில் செய்யப்பட்ட ஆய்வில் 4 கிணறுகளில் ஈயம் அதிகளவில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயம் போன்ற ஏனைய தேவைகளுக்காக இந்தக் கிணறுகள் பயன்படுத்தப்பட்டாலும் ஈயம் உணவுச் சங்கிலியின் ஊடாக கலந்து மனிதரில் நச்சுத் தன்மையை ஏற்படுத்தக் கூடிய அபாயம் காணப்படுவதால் தாமதமின்றி இந்தக் கிணறுகள் அடையாளம் காணப்பட்டு எந்தவித பாவனைக்கும் பயன்படுத்த முடியாதபடி சீல் வைக்கப் படவேண்டும்.

அத்துடன் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைத்துக் கிணறுகளிலும் ஈயம் முதலான பார உலோகங்கள் காணப்படுகிறதா? என ஆய்வின் மூலம் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு போதியளவு சுத்தமான நீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். (ஒரு மனிதனுக்கு நாளொன்றுக்கு 2 - 3 லீற்றர் நீர் குடிப்பதற்கு தேவையாகும்.) 

பாதிக்கப்பட்ட பகுதியில் நீர் சுத்திகரிக்கும் வடிகட்டிகளை பயன்படுத்த வேண்டும். தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் விநியோகிக்கப்படும் நீரில் எண்ணெய் கலந்துள்ளதாக பொதுமக்களால் முறைப்பாடு செயப்பட்டுள்ளதாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் வழங்குவது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதாகலாம் என்பதனாலும் வீட்டுத் தேவைகளுக்கு மலிவான தூண்டப்பட்ட கார்பன் வடிகட்டிகள் பயன்படுத்தப்படலாம்.  தூண்டப்பட்ட கார்பன் வடிகட்டிகள் வீட்டு நீர் பாவனையில் எண்ணெய் கலப்பை தூய்மை ஆக்குவதற்கும் ஈயத்தை குறைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதாக குறிப்புகள் காட்டுகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சரியான விஞ்ஞான பூர்வமான தகவல்களை இலகுவான மொழியில் துண்டுப் பிரசுரம் மூலமாக வழங்கி அவர்களுடைய மனப் பதட்டத்தை தணிக்க வேண்டும்.

இந்த மாசு படுத்தலுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி குற்றத்துக்கு பொறுப்புக் கூறவைத்து பொதுமக்களுக்கு நட்டஈட்டைப் பெற்றுக் கொடுக்க வழிவகை செய்தல் வேண்டும்.

யாழ்ப்பாண மருத்துவச் சங்கத் தலைவர் என்ற வகையில் இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சக வைத்திய நிபுணர்களினதும் ஆராச்சியாளர்களினதும் ஒத்துழைப்பைப் பெற்று உதவுவதற்கு தயாராக உள்ளேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.