துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.
சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவளித்துள்ளனர்.
நேற்றைய வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட 63 சதவிகித வாக்காளர்கள் பகுதி தானியங்கி மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவளித்தனர்.
டிசினோ மாகாண வாக்காளர்கள் மட்டுமே இந்த புதிய சட்டத்திருத்தத்தை புறக்கணித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் 48 சதவிகித மக்கள் தங்கள் வீடுகளில் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளனர். ஐரோப்பாவில் அதிக அளவில் துப்பாக்கி வைத்திருக்கும் மக்களில் சுவிஸ் மக்களும் அடங்குவர்.
2015ஆம் ஆண்டு பாரீஸ் தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து சுவிட்சர்லாந்து தனது துப்பாக்கி விதிகளை ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக கடுமையாக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியிருந்தது.
புதிய விதிகள், பகுதி தானியங்கி மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதோடு அவற்றை ட்ராக் செய்வதையும் எளிதாக்குகின்றன.
ஆனால் முன்னாள் ராணுவத்தினர் முதலானோர் துப்பாக்கிகள் வைத்திருப்பதை இந்த விதிகள் தடை செய்யாது.
உலகச்செய்திகள் 23.05.2019