சுவிஸ் குடிமக்களை விட அகதிகள் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்கள். ஆய்வு தகவல்

சுவிஸ் குடிமக்களை விட அகதிகள் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்கள்.  ஆய்வு தகவல்

சுவிட்சர்லாந்து நாட்டு மக்களை விட அந்நாட்டில் அகதிகளாக குடியேறிய வெளிநாட்டினர் நீண்ட ஆயுளுடன் வாழ்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

ஜெனிவா பல்கலைக்கழகத்தை சேர்ந்த Jonathan Zufferey என்பவர், ‘அகதிகள் எதனால் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்கள்?’ என்ற தலைப்பில் கடந்த 5 வருடங்களாக ஆய்வு ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்த ஆய்வு முடிவில், உள்நாட்டு ஆண்களை விட சுவிஸில் குடியேறிய வெளிநாட்டு ஆண்கள் இரண்டு வருடங்கள் கூடுதலாகவும், வெளிநாட்டு பெண்கள் 1.2 வருடங்கள் கூடுதலாக வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மாற்றத்திற்கு உறுதியான காரணத்தை கண்டுபிடிக்க இயலாவிட்டாலும், சுவிட்சர்லாந்து மக்கள் சமூக கலாச்சாரங்களை பின்பற்றுவதில் பின்தங்கி இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆயுள் இடைவெளி ஆபத்தான பணிகளை செய்பவர்களிடம் அதிகரித்தும், நிறுவனங்களில் உயர் பதவிகள் வகிப்பவர்களிடம் குறைந்தும் காணப்படுவதாக Zufferey கண்டுபிடித்துள்ளார்.

சுவிஸில் குடியேறும் வெளிநாட்டினவர்களின் பூர்வீகங்கள் குறித்து ஆய்வு செய்த அவர், போர்த்துக்கீஸ், துருக்கி மற்றும் யுகோஸ்லாவியா நாடுகளை சேர்ந்த மக்கள் சுவிஸ் மக்களை விட கூடுதல் ஆயுளுடன் வாழ்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வில் சுவிஸில் தஞ்சம் கோரி விண்ணப்பித்தவர்கள் மற்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கணக்கிடவில்லை.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஆண்களின் சராசரி ஆயுள் காலம் 80.7 வருடங்கள் என்றும் பெண்களின் சராசரி ஆயுள் காலம் 85.1 வருடங்களாக இருப்பதாக அவர் புள்ளிவிபரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்த மக்கள் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வந்திருந்தாலும் அவர்களின் ஆயுட்காலம் அதிகமாக இருப்பது ஒரு முரண்பாடாக இருக்கிறது.

இந்த ஆயுள் கால இடைவெளியின் உண்மையான காரணங்களை கண்டுபிடிக்கும் வகையில் விரிவான ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக Zufferey தெரிவித்துள்ளார்.