சென்னை பொலிஸாரின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட யாழ் தமிழரின் மகன்

சென்னை பொலிஸாரின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட யாழ் தமிழரின் மகன்

இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக சென்னை வாழ் இலங்கைத் தமிழர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட தனது 12 வயது மகனை பொலிசாரின் உதவியுடன் மீட்டுள்ளார் அவரது தந்தை.

குறித்த சம்பவம் தொடர்பில் தமிழக ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (44). ஈழத் தமிழரான இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். மனைவி இறந்து விட்டார்.

இந்நிலையில், தனது 12 வயது மகனை மீட்டுத் தரும்படி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 23ம் திகதி புகார் அளித்தார்.

இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க பொலிசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்படி, நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது. பொலிசார் இலங்கை தமிழர் அதிகமாக வாழும் பல்வேறு பகுதிகளில் பவித்ரன் எனும் குறித்த சிறுவனைத் தேடினர்.

இறுதியில், முகப்பேரில் ஜெயலட்சுமி என்பவர் இருப்பதைக் கண்டு பிடித்தனர். அவர் பொலிசாரிடம் ஒரு முகவரி கொடுத்து விட்டு மற்றொரு முகவரியில் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் பவித்ரன் தனது மகன் என்று கூறி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் சேர்த்துள்ளார். தற்போது, அவன் 7ம் வகுப்பு படித்து வருகிறான்.

இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து பவித்ரனை மீட்டு சிவபாலனிடம் ஒப்படைத்தனர். 45 நாள் தேடுதலுக்கு பிறகு மகனை மீட்டுக்கொடுத்த பொலிசாருக்கு சிவபாலன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.