தாயகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஆடிப்பிறப்பு

தாயகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஆடிப்பிறப்பு

தமிழர்களின் பிரதான பண்டிகைகளில் ஒன்றான ஆடிப்பிறப்பு பண்டிகை பல வருடங்களுக்கு பின்னர் இந்த வருடம் தமிழர் தாயகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. தாயகத்திலுள்ள பாடசாலைகள், திணைக்களங்கள், அரச அலுவலகங்கள், தனியார் கல்வி நிலையங்கள், கலை பயிற்சிக் கூடங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் இந்தப் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் இனத்துவ அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் தமிழர் நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்று கூறிய வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு இம்முறை பாடசாலைகளில் ஆடிப்பிறப்பை விசேடமாகக் கொண்டாடுமாறு கூறியிருந்தது.

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசாவின் பணிப்புரைக்கமைய கல்வி அமைச்சின் செயலாளரினால் அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றுநிருபங்களில் இம்முறை ஆடிக்கூழ் காய்ச்சி மாணவர்களுக்கு வழங்குமாறு கூறப்பட்டிருந்தது. அத்துடன் ஆடிப்பிறப்பு தொடர்பாக மாணவர்களுக்கு தெளிவுபடுத்துமாறும் அந்த சுற்றுநிருபத்தில் கூறப்பட்டிருந்தது. அதற்கமைய வடக்கு மாகாணத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகளில் நேற்று ஆடிக்கூழ் காய்ச்சப்பட்டது. மேலும் பல திணைக்கங்களிலும் இந்தச் செயற்பாடு இடம்பெற்றது.

தீவகத்தில் எழுவைதீவு முருகவேள் வித்தியாலயத்தில் நேற்றுக் காலை ஆடிப்பிறப்பு விழா சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது தரம் 11 மாணவர்களால் “ஆடிப்பிறப்பு” என்ற நாடகம் சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது.