தென்மராட்சி வலயத்தில் மாணவர்களின் அறிவை உயர்த்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

தென்மராட்சி வலயத்தில் மாணவர்களின் அறிவை உயர்த்த பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

யாழ் மாவட்டத்தின் நுழைவுப் பிரதேசமாக விளங்குகின்ற தென்மராட்சிப் பிரதேசத்தின் கல்வி நிலையை உயர்வடையச் செய்ய தென்மராட்சிக் கல்வி வலயம் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளமையை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பாராட்டுகின்றது.

வலயத்தின் கல்விப் பணிப்பாளர் திரு.சு.கிருஸ்ணகுமார் வலயக் கல்விப் பணிப்பாளராக பொறுப்பேற்றதன் பின்னர் கல்வி மட்டத்தில் பாரிய வளர்ச்சியை இக்கல்வி வலயம் பெற்று வருவது அனைவராலும் பாராட்டப்படுகின்றது.

கல்வி வலயத்தால் வெளியிடப்படுகின்ற மாணவர்கள், பாடசாலைகள் சார்ந்த வெளியீடுகள் அதற்குச் சான்றாக அமைகின்றன.

“சிறகு” என்னும் பெயரில் காலாண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படும் சஞ்சிகையும், ‘‘தென்மதி” என்னும் பெயரில் அரையாண்டுக்கு ஒரு முறை வெளியிடப்படும் சஞ்சிகையும், சமயத்திற்கு ஊடாக நல்ல விழுமியங்களை பிள்ளைகள் பெறுவதற்கு ‘‘விழுமியக் கல்வி” எனும் சஞ்சிகையும், மாணவர்களின் கணித அறிவை உயர்த்துவதற்கும் அதன் இலகு தன்மையை விளங்கிக் கொள்வதற்கும், அறிவியல் சார்ந்த குழந்தைகளை உருவாக்குவதற்கும் ‘‘கணிதம் செயல்நூல்” எனும் நூலையும், மாணவர்களுக்கான எதிர்கால தொழிலுக்கான ‘‘தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு” எனும் நூலையும், மற்றுமொரு தொழில் வழிகாட்டலுக்கான ‘‘Career Guidence Seminar” எனும் நூலையும் வெளியீடு செய்துள்ளமை பாராட்டுக்குரியது. இத்தகைய முயற்சிகளுக்கு தென்மராட்சி வலய அதிபர்கள், ஆசிரியர்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்குவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (18-11-2014) வலயக் கல்விப் பணிமனைக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் மற்றும் துணை நிதிச் செயலாளர் ந.தேவநேசன் ஆகியோர் வலயமட்ட அதிபர் ஆசிரியர்களின் இடமாற்றங்கள், மாணவர்களின் கல்வி வளர்ச்சி, அடைவுமட்டங்கள் தொடர்பாக கல்விப் பணிப்பாளருடன் கலந்துரையாடினர்.

அனைத்து மாணவர்களிடையேயும் வன்முறையற்ற தரமான கல்வியை உறுதி செய்வதற்கு எம்மாலும் பங்களிப்பு வழங்க முடியும் என பொதுச் செயலாளர் உறுதியளித்தார்.