நண்பனின் தந்தையைப் பார்த்த நண்பன் மயங்கி விழுந்து மரணம்

நண்பனின் தந்தையை பார்வையிட வைத்தியசாலைக்கு வந்த இளைஞர் ஒருவர் அங்கு மயங்கி விழுந்து மரணமானார்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது. சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:- தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நெஞ்சு வருத்தம் காரணமாக புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த ஒருவர் சேர்க்கப்பட்டிருந்தார். வைத்தியசாலைக்குச் சென்று தனது தந்தையை பார்வையிட்டு நிலைமையை கூறும்படி வவுனியாவில் உள்ள நண்பர் மரணம் அடைந்தவரிடம் தெரிவித்துள்ளார்

அதன்படி நண்பனின் தந்தையை பார்வையிட வந்த இளைஞர் வைத்தியசாலையில் மயங்கி வீழ்ந்து மரணமடைந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஊரெழு மேற்கு, ஊரெழுவை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான சுந்தரலிங்கம் பிரபாகரன் (வயது 29) என்பவரே இவ்வாறு மரணமானவராவார் பிரேத பரிசோதனைக்காக சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்