நலம் காக்கும் நகைச்சுவை

நலம் காக்கும் நகைச்சுவை

இது கலியுகம் என்பதை விட இயந்திரயுகம் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். காரணம் இன்று மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகளை இயந்திரங்கள் செய்கின்றன. இயந்திரங்கள் செய்ய வேண்டிய வேலைகளை மனிதர்கள் செய்கின்றனர். இன்றைய மனிதர்கள், மனிதர்களோடு பழகுவதை விட இயந்திரங்களோடு பழகியதன் விளைவு ‘சிரிப்பு’என்ற உணர்வே இல்லாத இயந்திரமாய் மனிதர்கள் மாறிப்போனார்கள்.

துன்பம் வரும்போது சிரியுங்கள், வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்ற பழமொழிகளை எல்லாம் மறந்த இனமாய் தமிழினம் வாழ பழக்கப்பட்டு வருகிறது.

நன்கு சிரித்துப் பழகுபவனுக்கு அதிக நண்பர்கள் இருப்பர். சிரிக்காத சிடுமூஞ்சிகளுக்கு நண்பர்கள் குறைவாகவே இருப்பர். நாம் சிரித்தால் நம்மோடு சேர்ந்து அனைவரும் சிரிப்பர், நாம் அழுதால் எவரும் நம்மோடு அழுவதில்லை. அதனால்தான் நகைச்சுவை அறிஞர் சார்லி சாப்ளின் கூட “நான் அழுதாலும் மழையில் அழவே ஆசைப்படுகிறேன்”என்றார்.

சிலருக்கு சிரிப்பு என்பது வாழ்க்கையின் முக்கிய பகுதியாக மாறும்பொழுது, வேறு சிலருக்கோ சிரிப்பதற்கே நேரம் கிடைப்பதில்லை. ஆனால் சிரிப்பின் மகிமையை உணர்ந்தால் அறிமுகமில்லாத நபர்களைப் பார்த்தும் நாம் புன்னகைப்போம். சிரிப்பு வெறும் முகபாவம் அல்ல. உடல் உறுப்புகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கான பல்வேறு என்சைம்களும்,ஹார்மோன்களும் சிரிப்பின் மூலம் உற்பத்தியாகின்றன.

நாம் நலமாக இருக்க ஒன்று, நாம் நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருக்க வேண்டும் அல்லது நகைச்சுவை உணர்வு உள்ளவர்களை நண்பர்களாகப் பெற்றிருக்க வேண்டும். இவ்விரண்டும் இல்லாதவர்கள் கடமைக்கு வாழ்ந்து மறைபவர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறுபவர்களாகவே இருப்பார்கள்.

சிரிப்பின் பயன்கள்:

நாம் காலை முதல்; இரவு வரை பரபரப்பான வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் மன அழுத்தம்,மன உளைச்சல்,பொருளாதார போராட்டம் என பல நெருக்கடிகளை சந்திக்கிறோம். இதற்கு இடையில் சிரிப்பதையே மறந்து விடுகிறோம். சிரிப்பு தான் பல பிரச்சனைகளுக்கு மருந்தாய் விளங்குகிறது. சிரிப்பினால் விளையும் பயன்களாவன.

சிரிக்கும் போது முகத்தின் தசை நார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. இது முகத்தின் அழகு அதிகரிக்க காரணமாகிறது.

மன அழுத்தத்தை குறைக்கிறது.

உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

தசை நார்களின் இறுக்கத்தை குறைக்கவும்,ரத்த அழுத்தம் போன்ற நோய்களை விரட்டவும் பயன்படுகிறது.

நீண்ட சிரிப்பு, உடலில் உள்ள அதிக கலோரிகளைஎரிக்கப்பயன்படுகிறது.

சிரிக்கும் பொழுது உடலில் ஜீரணிக்கும் நீர் சுரக்கிறது, இதனால் உணவுகள் எளிதாக ஜீரணமாகிறது.

சிரிக்கும் பொழுது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

சிரிக்கும்பொழுது மூளையில் அதில எண்டோர்ஃபின் ஹார்மோன் சுரக்கிறது. இது சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்.

இதயத்துடிப்பை சாதாரண நிலைக்கு கொண்டுவர சிரிப்பு உதவுகிறது.

சிரிக்கும் பொழுது உடல் வலியைக் குறைக்கும் ஹார்மோன் உற்பத்தியாகிறது.