நல்லூர் ஆலயச்சுற்றாடலில் புகையிலை, மதுபானத்துக்கு எதிராக நடவடிக்கை

நல்லூர்  ஆலயச்சுற்றாடலில் புகையிலை, மதுபானத்துக்கு எதிராக  நடவடிக்கை

நல்லூர் ஆலயச் சுற்றாடலில் புகையிலை மற்றும் மதுபானம் சார் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதோ பயன்படுத்துவதோ கண்டறியப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்.மாவட்ட புகைத்தல் கட்டுப்பாட்டு செயலணி தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தில் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள மேற்படி குழு, இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அது தொடர்பாக உடனடியாக தமக்கு அறியத்தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

யாழ்.மாவட்ட புகைத்தல் கட்டுப்பாட்டுக் குழுவின் கூட்டம் கடந்த திங்கட்கிழமை யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றபோதே மேற்படி சட்ட நடவடிக்கை தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மேற்படி செயலணியில் அங்கம் வகிக்கும் சுகாதாரத்துறை, பொலிஸார், மதுவரித் திணைக்களம், வணிகர் கழகம் மற்றும் சிறுவர் தொடர்பான செயற்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

புகைத்தல் மற்றும் மதுபாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன.
பொது இடங்களில் புகையிலை சார் பொருட்களான சிகரட், பீடி, சுருட்டு மற்றும் மதுபானம் சார் பொருட்களை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த நடைமுறையை மீறிச் செயற்பட்ட பலர் அண்மைக் காலமாக பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்டு தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்பேர்து நல்லூர் உற்சவம் ஆரம்பமாகியிருக்கின்ற நிலையில் சுகாதாரப் பிரிவு இந்தச் செயற்பாடு தொடர்பாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. ஆலய வளாகத்திலோ அதற்கு அண்மைய சூழலிலோ புகைப்பொருட்களான சிகரட், பீடி, சுருட்டு மற்றும் மதுபானம் போன்றன விற்பனை செய்யப்படுவது அல்லது அதனைப் பயன்படுத்துவது போன்ற செயற்பாடுகள் இடம்பெற்றால் அது தொடர்பாக பொலிஸார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடந்த திங்கட்கிழமை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தச் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு சுகாதாரத் துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொது இடங்களில் புகையிலை சார் மற்றும் மதுபானம் சார் பொருட்களை பயன்படுத்துபவர்கள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.