நல்லூர் ஆலயம் தமிழர் பண்பாட்டின் அடையாளம்! (படங்கள்)

நல்லூர் ஆலயம் தமிழர் பண்பாட்டின் அடையாளம்! (படங்கள்)

நல்லூர் ஆலய உற்சவகாலங்களில் அடியார்கள் தமிழ்ப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் கலாசார உடைகளை அணிந்து வருவதுடன் கலாசாரப் பிறழ்வான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பண்பாட்டுப்பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.

 

இதுகுறித்து அந்தப்பேரவையினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

கலாசார உடைகளின் முக்கியத்துவம் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டுமென முழுமூச்சாக இயங்கி இம்முறை ஒரு பெரும் மாற்றத்தை நாம் கொண்டுவந்திருக்கிறோம்.

நல்லைக் கந்தன்ஆலயத் திருவிழாவானது தனியே ஒரு ஆலயத்தினுடைய திருவிழா அன்றி ஒட்டுமொத்தத் தமிழ் மக்களினதும் பண்பாட்டையும் பேணுகின்ற ஒரு பெருவிழாவாகவே பார்க்கப்படுகின்றது.

எனவே இந்த ஆலயத்திற்கு வருகின்ற புலம்பெயர் தமிழ் மக்களும் தாயகத்திலுள்ள தமிழ் மக்களும் தமிழ்ப் பண்பாட்டைப் பேணுவதன் அவசியம் இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆலயத்திற்கு வரும்போது தமிழரின் பாரம்பரிய உடைகளை அணிந்து வருமாறும் ஆலயத்தின் புனிதத்தன்மையைப் பேணுமாறும் நிர்வாகம் கோரியிருக்கின்றமைக்கமைய அடியார்கள் பலர் தமது நடையுடை பாவனைகளை மாற்றியிருப்பதை கண்கூடாகக் காணமுடிவதுடன் இது ஒரு கலாசார மைல்கல் என்றும் குறிப்பிடலாம்.-என்றுள்ளது.