நவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.
நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன் நோக்கம். இது பலருக்கும் தெரிந்த காரணம். ஆனால் இதை தாண்டி பல சுவாரஸ்யமான காரணங்கள் மற்றும் நவராத்திரி கொண்டாடும் முறைகளை பற்றி பார்ப்போம்.
நவராத்திரி பண்டிகை வருடத்தில் ஐந்து முறை கொண்டாடப்படுகிறது. ஷரத் நவராத்திரி, சைத்ர நவராத்திரி, அஷாட நவராத்திரி, பவுஷ் நவராத்திரி மற்றும் மாக் நவராத்திரி என்று இவை அழைக்கப்படுகிறது. இதில் தற்போது செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் வரும் இந்த ஷரத் நவராத்திரி தான் விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரியாகும்.
இந்து மதத்தின் பஞ்சாங்கத்தின்படி கணிக்கப்படுவதால் இதன் தேதிகள் வருடத்திற்கு வருடம் மாறுபடும். அமாவாசையன்று தொடங்கி அடுத்த பத்தாவது நாளான தசமி திதி முடிவடைகிறது நவராத்திரி.அன்னை சக்தியின் அவதாரங்களான ஒன்பது தேவியர்கள் துர்கை, பத்ரகாளி, ஜகதாம்பா, அன்னப்பூர்ணி, சர்வமங்களா, பைரவி, சந்திரிகா, லலிதா, பவானி மற்றும் மூவாம்பிகா ஆகியவர்களேயே நவராத்திரியின் போது மக்கள் வழிபடுகிறார்கள்.
சைத்ர நவராத்திரியின் பத்தாவது நாள்தான் ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. ஷரத் நவராத்திரியின் பத்தாவது நாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையென்று நவராத்திரியை அழைக்கிறார்கள். துர்க்கையை அழகாக அலங்கரித்து வழிபடுவது இவர்களின் வழக்கமாக இருக்கிறது. கர்நாடகாவில் தசரா என்று அழைக்கப்படும் நவராத்திரியின் போது சாமுண்டீஸ்வரி அம்மனை யானையின் மேல் அம்பாரியில் இருத்தி ஊர்வலமாக அழைத்து செல்வது விசேஷம்.
வட நாடுகளில் ராவணனின் உருவச்சிலையை நன்கு அலங்கரித்து வீதிகளில் வைத்திருந்து அதை பின்பு ஊர்வமாக எடுத்துச் சென்று எரிப்பது வழக்கமாக இருக்கிறது.
குஜராத்தில் கர்பா என்ற நடங்களையும், மும்பையில் டாண்டியா என்ற நடனத்தையும் மக்கள் நவராத்திரியின்போது ஆடுகிறார்கள்.
பாண்டவர்கள் தங்களின் வனவாசத்தின் போது ஒரு வருடம் மாறு வேடத்தில் மறைந்து வாழும் சமயம் தங்களின் ஆயுதங்களை எல்லாம் ஷாமி என்ற மரத்தின் ஒரு பொந்திற்குள் வைத்து விட்டு சென்றார்கள். அப்படி அவர்கள் மறைந்து வாழும்போது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீண்டும் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் என்பது பந்தய விதி. எனவே, ஷாமி மரத்தை பஞ்ச பாண்டவர்கள் மிகவும் பக்தியோடு தங்களின் ஆயுதங்களை பாதுகாக்கவும், தாங்கள் வெற்றியுடன் திரும்பவும் அருள் புரியுமாறு வேண்டிக் கொண்டனர். இந்த நிகழ்வையும் தசராவுடன் தொடர்பு படுத்தி பூஜிப்பவர்களும் உண்டு.-
ஆன்மீக செய்திகள் 08.10.2019