நாடெங்கிலும் விளையாட்டு மருத்துவ சேவை விஸ்தரிக்க திட்டம்

நாடெங்கிலும் விளையாட்டு மருத்துவ சேவை விஸ்தரிக்க திட்டம்

சுகாதார அமைச்சு நாடெங்கிலும் விளையாட்டு மருத்துவ சேவையை விஸ்தரிக்கத் திட்டமிட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் விளையாட்டின் போது திடீர் மரணமாவதைத் தடுக்க ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் புதிய நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.

சுகாதார அமைச்சு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் கல்வியமைச்சு இணைந்து இத்திட்டத்தை அமுல்படுத்தவுள்ளது. மாணவரின் உடற் சுகாதாரத்தை மேம்படுத்தவும் இப்பிரிவு உதவும். விளையாட்டு மருத்துவத் துறையில் டிப்ளோமாப் பட்டம் பெற்ற வைத்தியர்கள் இப்பிரிவுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

கடந்த காலங்களில் மரதன் மற்றும் சத்திஅதிகம் செலவழிக்கும் சில நிகழ்ச்சிகளின் போது மாணவர் மரணித்த சம்பவத்தையடுத்து இவ்விசேட திட்டம் முனைப்புப் பெற்றுள்ளது.

இனிமேல் 1500 மீற்றருக்கு மேலுள்ள சகல நெடுந்தூர ஓட்டங்களுக்கும், கபடி, காற்பந்தாட்டம், றக்பி 400 மீற்றருக்குக் கூடிய சைக்கிளோட்டம், நீச்சல் போன்ற பாரிய வலு பாவிக்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஒரு மாணவன் பங்குபற்ற வேண்டுமாயிருந்தால் இரு வகையான அனுமதிகளை இம்மருத்துவசேவைப் பிரிவிலிருந்து பெற வேண்டும்.

நிகழ்ச்சிக்கு முன்னரான மதிப்பீடுமற்றும் நிகழ்ச்சி பங்குபற்றுவதற்கான முன்னரான மதிப்பீடு ஆகிய சோதனைகளுக்கு மாணவர்கள் தோற்றவேண்டும். அவசியமாயின் ஈசிஜி சோதனைக்கும் தோற்ற வேண்டும். பின்னர் அவற்றுக்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டபின்னரே குறிப்பிட்ட விளையாட்டில் பங்குபற்ற முடியும்.

இந்த இருவகையான மருத்துவப்பரிசோதனைகளுக்கு மாணவர் உட்படுத்தப்பட்ட பின்னரே குறிப்பிட்ட பெரு விளையாட்டுகளில் பங்குபற்ற அனுமதிக்கப்படவேண்டும். இச்சோதனைகளில் உடற்தகுதியை போதுமானளவு காட்டமுடியாத பட்சத்தில் விளையாட்டில் பங்குபற்ற அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும் இவ்விசேட விளையாட்டு மருத்துவப்பிரிவு நாட்டில் 11 பிரதான வைத்தியசாலைகளில் இயங்கிவருகின்றது. வடக்கில் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் கிழக்கில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் இவ்வசதி உள்ளது. அங்கு விளையாட்டு மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற வைத்திய அதிகாரிகளான டாக்டர் அருள்செல்வம் மற்றும் டாக்டர் புகைம் ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர்.

இதேபோன்ற பிரிவுகளை ஏனைய பிரதான வைத்தியசாலைகளிலும் ஏற்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. என்பு மற்றும் மூட்டு உறுப்புகளில் நிபுணத்துவம் பெற்ற வைத்தியநிபுணர்கள் இப்பிரிவில் சேவையாற்றமுடியும். இவர்கள் இல்லாத பட்சத்தில் விசேட வைத்திய நிபுணர்கள் இதற்காக சேவையாற்றமுடியும்.

இதற்கான சகல சுற்றுநிருபங்களும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

மருத்துவசோதனையின் பின்னரான இவ்வனுமதிச்சான்றிதழ் இல்லாமல் மேற்படி விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்தவாரம் கல்வியமைச்சில் விளையாட்டுத்துறை உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த உத்தியோகத்தர்களுக்குமான கூட்டத்தில் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம் கலந்து கொண்டிருந்தார்.அக்கூட்டத்திலும் இதுவிடயம் பிரஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.