நிலத்தடிநீரின்றி எப்படி நீடிக்கும் உலகு?

நிலத்தடிநீரின்றி எப்படி நீடிக்கும் உலகு?

உலக அளவில் நிலத்தடிநீர் வேகமாக வற்றிவருகிறது. வெவ்வேறு நாடுகளில் பரந்து விரிந்துள்ள பகுதிகளில் மிகப் பெரியவை என்று 37 நிலத்தடிநீர் இருப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மிகப் பெரிய கடல் என்று கற்பனை செய்யக்கூடிய அளவுக்கு நீர்வளம் பெற்றிருந்த இவற்றில் சரிபாதிக்கும் மேல் வேகமாக உறிஞ்சப்பட்டதால், மிக மோசமான அளவில் குறைந்துவிட்டன. மழை நீர் சேகரிப்பு போன்ற திட்டங்களை இனி 100% கடைப்பிடித்தால்கூட இந்த நிலத்தடிநீர்த்தேக்கங்கள் இனி நிரம்புவது சந்தேகம்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கிரேஸ் என்ற செயற்கைக்கோள் கட்டமைப்பைப் பயன்படுத்தி, புவியைப் புகைப்படங்கள் எடுத்ததுடன் பல்வேறு நீர்ப்பயன்பாட்டுத் தரவுகளையும் பெற்று ஆராய்ந்து இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இது உலக மக்களுக்கு மட்டுமல்ல, நாடுகளுக்கும் எச்சரிக்கை தரும் செய்தியாகும்.

உலகின் 37 மிகப் பெரிய நிலத்தடிநீர் இருப்புத் தேக்கங்களில் சுமார் 21 இந்தியா, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருக்கின்றன. இழந்த நீரைப் பெற மீண்டும் தங்களைத் தாங்களே வலுப்படுத்திக்கொள்ளும் திறனை இந்த நிலத்தடி நீர்த்தேக்கங்கள் இழந்துவிட்டன. இவற்றிலிருந்து 2003 முதல் 2013 வரையில் எடுக்கப்பட்ட தண்ணீரின் அளவைப் பெற்று நாசா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. 13 நிலத்தடி நீர்த்தேக்கங்கள் மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டன. நிலத்தடிநீர் இருப்பு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது என்று கலிஃபோர்னியாவில் உள்ள நாசாவின் ஆய்வுக்கூட முதன்மை ஆய்வாளர் ஜே ஃபேமிகிளிட்டி புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி எச்சரிக்கிறார்.

நிலத்தடிநீரின் பங்கு 35%

உலக அளவில் மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் 35% நிலத்தடியிலிருந்து கிடைப்பவை. வறட்சிக் காலங்களில் அதிக ஆழத்துக்குத் துளையிட்டு தண்ணீரை மென்மேலும் உறிஞ்சி எடுக்கின்றனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஆற்று நீரும், நிலத்துக்கு மேலிருந்த நீர்நிலைகளும் அடியோடு வற்றிவிட்டதால் இப்போது நிலத்தடிநீரை ராட்சத ஜெட்டுகள் வைத்து உறிஞ்சி எடுக்கின்றனர். கலிஃபோர்னியாவில் இப் போது பயன்படுத்தப்படும் நீரில் 60% நிலத்தடிநீர்தான். சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தப் பயன்பாடு அதிகபட்சம் 40% ஆகத்தான் இருந்தது. இந்த ஆண்டின் இறுதியில் கலிஃபோர்னி யாவில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொட்டுநீரும் நிலத்தடி நீராகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலத்தடிநீர்ப் பயன்பாடு மிகவும் அதிகமாக இருப்பது மக்கள்தொகை மிகுந்த வளரும் நாடுகளில்தான். இந்தியாவின் வட-மேற்கு எல்லைப் பகுதிகளிலும் பாகிஸ்தானிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் இந்த நிலை காணப்படுகிறது. இங்கெல்லாம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் மாற்று வழியில் நீரை வழங்க வேறு நீர் ஆதாரங்களே கிடையாது. இங்கு அடியோடு தண்ணீர் வற்றிவிட்டால் சமூக அமைதி குலைந்து அதனால் நிச்சயமற்ற நிலை ஏற்படும்.

நிலத்தடிநீர் அளவு குறைந்ததால், இப்பகுதிகளில் புவிஈர்ப்பு விசையிலும் லேசான மாற்றங்கள் ஏற்படுவதை நாசாவின் செயற்கைக்கோள்கள் பதிவுசெய்து அனுப்பியிருக்கின்றன. நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் ஏற்படக்கூடிய விளைவுகளில் இதுவரை இடம்பெற்றிராத, முக்கியமான நிகழ்வு இது. நாம் பேசிக்கொண்டிருப்பது வெறும் தண்ணீர் பற்றாக்குறைப் பிரச்சினை மட்டுமல்ல என்பது மட்டும் புரிகிறது. நிலத்தடிநீர் நிரம்பிய பகுதிகளில் புவியின் அழுத்தம் அதிகமாகவும் நீர் குறைந்த பகுதிகளில் சற்றே குறைவாகவும் பதிவாகிறது.

புவியின் மிகப் பெரிய நீர்த்தேக்கங்கள் காலப்போக்கில் எப்படி மாற்றம் அடைகின்றன என்பதை ஆய்வுசெய்ய நமக்குக் கிடைத்துள்ள முதல் வாய்ப்பு இது என்று ஓரிகான் மாகாண பல்கலைக்கழக நீரியியல் துறை ஆராய்ச்சியாளர் கார்டன் கிராண்ட் கூறுகிறார்.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஏற்பட்ட தண்ணீர் திரட்சியால் உருவானவை இந்த நிலத்தடி நீர்த்தேக்கங்கள். இப்பகுதியில் அடர் மழை பெய்தாலும் அத்தனை நீரும் அப்படியே பூமிக்குள் இறங்கி இழப்பைச் சரி செய்துவிடுவதில்லை. மிகக் குறைவான அளவுக்கே நீர் உள்ளே கசிந்து இறங்குகிறது. எஞ்சியவை மேற்பரப்பில் தேங்கி பிறகு வழிந்தோடியோ ஆவியாகியோ காணாமல் போகிறது. பனி உருகும்போதும் மழை பெய்யும்போதும் கிடைக்கும் நீரில் மிகச் சிறிதளவுதான் இந்த நிலத்தடி நீர்த்தேக்கங்களில் போய்ச் சேருகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

தண்ணீர் வேண்டும் என்றால், தரைக்கடியில் துளையிட்டு தண்ணீரை உறிஞ்சுவது உலகின் எல்லாப் பகுதியிலும் இப் போது வழக்கமாகிவிட்டது. ஆனால், காலவரம்பின்றி தன்ணீர் கிடைத்துக்கொண்டே இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று ஃபேமிகிளிட்டி சுட்டிக்காட்டுகிறார்.

நிலத்தடி நீர்த்தேக்க ஆயுள்

உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் நிலத்தடி நீர்த்தேக்கங்களின் ஆயுளானது அதன் மீது இருக்கும் மக்கள் தொகை, அவர்களுடைய தண்ணீர்ப் பழக்கம், தண்ணீரை எடுக்க அவர்கள் கையாளும் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பொருத்து வேறுபடுகிறது. உதாரணத்துக்கு, ஆஸ்திரேலியாவின் கேனிங் ஆற்றுப்படுகையானது உலகிலேயே நீர்வளத்தை இழப்பதில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதேசமயம், ஆர்ட்டீஷியன் வடிநிலத்தில் உள்ள நிலத்தடி நீர்த்தேக்கம் தண்ணீர் வளத்துடன் நன்றாக இருக்கிறது.

சுரங்கத் தொழில் நடைபெறும் இடங்களில் குறிப்பாக, தங்கம், இரும்புத்தாது கனிமங்கள் மற்றும் பெட்ரோல், இயற்கை எரிவாயு போன்றவற்றின் அகழ்வுப் பணியின்போது அதிக தண்ணீர் செலவிடப்படுகிறது.

உலகிலேயே மிகவும் அதிகமாக நிலத்தடித் தண்ணீர் எடுக்கப்படுவது அரேபியப் பகுதியாகும். இங்கு மட்டும் 6 கோடி மக்கள் நிலத்தடிநீரைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொதுவாக இருக்கும் சிந்துசமவெளி, லிபியா, நைஜர் ஆகியவற்றுக்கான முர்சுக் – ஜாடோ வடிநிலமும் அப்படிப்பட்டவைதான்.

அட்லான்டிக் கடலோரத்திலும் வளைகுடா கடற்கரையோரச் சமவெளியிலும்கூட நிலத்தடிநீர் இழப்பு கணிசமாகிவிட்டது. இது தென்கிழக்கு கடலோரப் பகுதி முதல் ஃபுளோரிடா வரை நீள்கிறது. அதே வேளையில், இந்நாட்டின் நடுப்பகுதியில் உள்ள மூன்று பெரிய நிலத்தடி நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு நல்ல நிலையில் உள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே நிலத்தடிநீரானது மேலும் கசிந்து நிலத்தடிநீர்த் தேக்கப் பகுதியில் திரள்கிறது. ஆனால், எஞ்சியவை வெப்பத்தில் ஆவியாகியோ, கடலில் போய் விழுந்தோ வீணாகிவிடுகிறது. கடலில் நீர்மட்டம் உயர்வதற்கு 40% காரணம் நிலத்தடிநீரை உறிஞ்சி எடுத்து மனிதர்கள் பயன்படுத்திவிட்டு, அப்படியே கடலில் போய்விழ அனுமதிப்பதுதான் என்று ஜப்பானிய ஆய்வாளர்கள் 2012-ல் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

புவிவெப்பமடைதலும் காரணம்

நிலத்தடிநீர் வேகமாகக் குறைய மற்றொரு காரணம் புவி வெப்பமடைவதுதான். பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் வெயிலும் அனலும் அதிகரிப்பதால் வறட்சி தீவிரமாக இருக்கிறது. அதே வேளையில், பூமத்திய ரேகைக்குத் தொலைவில் உள்ள துருவப் பகுதிகளில் கன மழையும் குளிர் மழையும் அதிகரிக்கின்றன. தண்ணீர் இருப்பில் நிலவும் சமமின்மையைப் போக்க இயற்கையே சில சுய திருத்த நடவடிக்கைகளை எடுக்கிறது. நிலத்தடிநீரை வெளியே எடுத்துச் சிறிது பயன்படுத்திய பிறகு ஆவியாகும் பெரும்பகுதி நீர் குளிர்ந்து துருவப் பகுதிகளில் மழையாகப் பொழிந்துவிடுகிறது. ஆனால், நிலத்தடி நீர்த்தேக்கங்களுக்கு அதனால் பலன் கிடைப்பதில்லை.

இந்தத் தகவல்கள் உலக நாடுகளுடைய கண்களைத் திறக்கும் என்று எதிர்பார்க்கலாம். மழை நீரைச் சேமிப்பது முதல், மரம் வளர்ப்பது வரை நாம் திட்டமிட வேண்டியது நிறைய இருக்கிறது!