நீர் வற்றி விளையாட்டு மைதானம் போல் யாழ்.பொன்னாலைக் கடல்

 நீர் வற்றி விளையாட்டு மைதானம் போல் யாழ்.பொன்னாலைக் கடல்

யாழ்.குடாநாட்டில், வலிகாமம் மேற்கிலுள்ள பொன்னாலை பரவைக் கடலில் நீர் வற்றியுள்ளதால் இந்தக் கடலை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

இந்து சமுத்திரத்தின் தொடுகடலாக இருக்கின்ற பொன்னாலைக் கடல் பரவைக்கடலாக இருக்கின்ற காரணத்தால் இங்கு கடற்றொழிலாளர்கள் கூட்டு வலை, இழுவை வலை, களங்கண்டி, வீச்சு வலை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் காரைநகர் மற்றும் பொன்னாலைப் பகுதிகளைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களும் இங்கு நண்டு, இறால் பிடித்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் கடும் வரட்சி மற்றும் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்தக் கடல் கடந்த நான்கு தினங்களுக்கு மேலாக நீர் வற்றி வரண்ட தரையாக, விளையாட்டு மைதானம் போன்று காணப்படுகின்றது.பருவகாலங்களுக்கு ஏற்ப வருடாந்தம் ஒரு சில நாட்களுக்கு நீர் வற்றுகின்ற போதிலும் இந்த வருடம் கடல் வரண்ட தரையாக மாறியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இந்தக் கடலை நம்பியுள்ள தாங்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.தினமும் காலை தொடக்கம் மாலை வரை இந்தக் கடலில் வீச்சு வலைத் தொழிலாளர்கள் வலை வீசி தொழில் செய்து வருகின்றனர். பொன்னாலை பாலத்தினூடாக செல்பவர்கள் மேற்படி வீச்சு வலைத் தொழிலாளர்களிடம் உடன் மீன் பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் கடந்த சில தினங்களாக கடல் வற்றியுள்ளதால் இந்த தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், இந்தப் பரவைக் கடல் ஊடாக வள்ளங்களில் சென்று ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்ற கடற்றொழிலாளர்களும் கடலில் நீர் வற்றியதால் ஆழ்கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடற்றொழிலாளர் குடும்பங்கள் வாழ்வாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.