பன்றித்தலைச்சி அம்மன் கோவில்-யாழ்ப்பாணம்

பன்றித்தலைச்சி அம்மன் கோவில்-யாழ்ப்பாணம்

பன்றித்தலைச்சி அம்மன் கோவில், இலங்கை நாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்றாகும். இது இங்குள்ள தென்மராட்சி சாவகச்சேரி-புத்தூர்  வடக்குப் பகுதியில் மட்டுவிலில் அமைந்துள்ளது.

அழகான வயலும் வயல் சார்ந்த இடத்தில் மருதமரம், புளியமரம் ஓங்கி வளர்ந்த பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. அம்பாளின் ஆலயம் 1750 ஆம் ஆண்டுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாக ஆலயத்தின் மூலஸ்தானத்தின் பின்புறமாக பித்தளையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் சான்று கூறுகின்றன.

ஆலயத்திற்க்கு வருகைதரும் பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக ஆலயத்தின் தெற்குப் பக்கத்தில் 100 அடி நீளம் அகலம் உடைய தீர்த்தக் கிணறு அமைந்துள்ளது. அந்த இடத்தில் பொங்கல் வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்து அம்பாளிடம் வேண்டும் வரங்களை பெறுவர்.

ஸ்தல வரலாறு: முற்காலத்தில் அம்பாள் மட்டுவில் பகுதியில் இயற்கை வனப்பு நிறைந்த கிராமத்தில் இருந்து பல அற்புதங்களையும் அருளாட்சியையும் வழங்கி வந்ததாக வரலாறுகள் கூறிவருகின்றன.
இந்த ஆலயத்தில் பறையடிக்கும் பக்தன் ஒருவன், ஒருமுறை எறிந்த கூரிய ஆயுதம் இலக்குத் தவறி பசு ஒன்றின் மீது பட்டது. உடனே அப்பசு துடி துடித்து இறந்தது. அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்ட அந்த பக்தன் வருந்தி,  தெய்வத்தின் துணை இருக்கிறதே என்ற துணிவோடு அந்தப் பசுவை ஆலயத்திற்கு தென்கிழக்கு பகுதியில் புதைத்து விட்டான்.

நடந்த சம்பவத்தை எப்படியோ தெரிந்து கொண்ட மாட்டு உரிமையாளர், அந்த பக்தன் மீது நடவடிக்கை எடுத்தான். பசுக் கொலை புரிந்த பாதகத்திற்காக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பயந்த பக்தன் தனக்கு அபயம் அளிக்கும்படி அன்னையிடம் வேண்டினான்.

அன்றிரவு அடியவனின் கனவில் முதிய விதவைக் கோலத்தில் காட்சி கொடுத்த அம்மை “நாளைய தினம் பன்றி எச்சங்களை புதைத்தேன் என்று கூறு” என்று அருள்புரிந்தாள். என்ன அதிசயம்! அடுத்த நாள் மாட்டுத்தலை புதைக்கப்பட்ட இடத்தில் பன்றித்தலை காணப்பட்டது.

அதைக்கண்ட பக்தன் மெய்சிலிர்க்க, கண்ணீர் மல்க, வாய் குழறியபடி பன்றித் தலைச்சி என்று பக்தியோடு பல முறை பணிந்தான். அவனுக்கு  கிழக்கோலத்தில் கனவில் காட்சி கொடுத்த காரணத்தால் அம்மனை பற்றிப் பேசும் போது “கிழவி” எனக் குறிப்பிட்டுப் பேசுவோர் மட்டுவிலில் இன்றும் வாழ்கிறார்கள்.

இந்த ஆலயம் கி.பி. 1750 ஆம் ஆண்டில் திருநாகர் கதிர்காமர் என்பவரால் வெள்ளை கற்களால் கட்டப் பெற்றதாக கூறப்படுகிறது.

கர்மவினைகளால் கொலை பாதகத்திற்க்கு நிகரான தோஷங்கள் உடையோர் அதனால் வாழ்வில் முன்னேற முடியாமல் தவிப்போர் இலங்கை சென்றால் இக்கோவிலில் வழிபட்டு வாழ்வில் வசந்தம் அடையலாம்.

1946 ஆம் ஆண்டில் முதன் முதலாக இக்கோவிலுக்கு கும்பாபிஷகம் செய்யப்பட்டது. 1952 இல் இருந்து ஆறுகால நித்திய பூசையும் நடந்து வருகிறது.

செல்லும் வழி: இலங்கை நாட்டில் யாழ்ப்பாணம் நகருக்கு அருகே சாவகச்சேரி புத்தூர் வடக்கு பகுதியில் 3 கி.மீ. தொலைவில் உள்ள மட்டுவில் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

ஈழத்து நடிகர் வி.வி.வைரமுத்துவும் அரிச்சந்திரன் நாடகமும்(காணொளி)