தேவைகளை நிவர்த்தி செய்யாதுவிடின் வன்முறை எண்ணம் கொண்டவராக மாற்றும்: அதிபர் கனகராசா

 தேவைகளை  நிவர்த்தி செய்யாதுவிடின்  வன்முறை எண்ணம் கொண்டவராக மாற்றும்: அதிபர் கனகராசா

ஒரு பிள்ளையின் அன்புத் தேவைகளை நாம் உரிய வகையில் நிவர்த்தி செய்யாத போது அது கூடப் பிற்காலத்தில் ஒருவரை வன்முறை எண்ணம் கொண்டவராக மாற்றும்.

இவ்வாறு தெரிவித்தார் யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் க.கனகராசா.

யாழ்.வயாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழா அண்மையில் உரும்பிராய் இந்துக் கல்லூரி கற்பகவிநாயகர் கலையரங்கில் அதிபர் ஜே.யூட் மரியரட்ணம் தலைமையில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு பிள்ளை வாரத்தில் 30 மணித்தியாலங்கள் பாடசாலையிலும், 30 மணித்தியாலங்கள் தனியார் கல்வி நிலையங்களிலும், மிகுதி 108 மணித்தியாலங்கள் வீட்டிலும் நேரத்தைச் செலவிடுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு வீட்டில் கணவர் மாத்திரமன்றி மனைவியும் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இதனால் கூடப் பிள்ளைகளின் மனநிலை பாதிப்புக்குள்ளாகிறது.

சிறுவயதில் நல்ல பழக்க வழக்கங்கள், நல்ல வார்த்தைப் பிரயோகம் ஆகியவற்றைத் தாய் தந்தையரிடமிருந்து தான் ஒரு பிள்ளை கற்றுக் கொள்கிறது.

எனவே, வீட்டில் பெற்றோர்களிடையேயான உரையாடல் அமைதியானதாகவும், அறிவு பூர்வமானதாகவும் அமைய வேண்டும்.

வறுமையிலிருந்து மீள நாம் கல்வியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும். வறுமை கல்விக்கு ஒரு போதும் தடையாக அமையக் கூடாது என்றும் கூறினார்.