மட்டு. கொக்கட்டிச்சோலை ஆலயத் தேரில் அகப்பட்டு ஒருவர் பரிதாப மரணம்

மட்டு. கொக்கட்டிச்சோலை ஆலயத் தேரில் அகப்பட்டு ஒருவர் பரிதாப மரணம்

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவத்தின்போது தேர்ச்சில்லில் அகப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற தேரோடும் ஆலயம் என பெயர் கொண்ட தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் இன்றைய தேர் உற்சவத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் திரண்டிருந்தனர்.

இந்த நிலையில், முனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த எஸ். ஜீவானந்தம் (வயது 42) என்பவர் தேர் சில்லில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மேலும், இதன்போது காயமடைந்த நால்வர் உடனடியாக மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேர், ஆலய உள் வீதியில் உலா வரும்போது அக்கினி மூலையில் வைத்து ஜீவானந்தம் தேரின் பின்புறச் சில்லுக்குள் அகப்பட்டு மரணமாகியுள்ளார்.

சற்று மழை பெய்து கொண்டிருந்ததால் ஜீவானந்தமும் காயம் பட்ட ஏனைய நால்வரும் வழுக்கி விழுந்து தேரின் மரச் சில்லுக்குள் அகப்பட்டிருக்கலாம் என்று தேரோட்டத்தில் கலந்து கொண்ட அடியார்கள் தெரிவித்தனர்.

தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்ட உற்சவ வரலாற்றில் தேர்ச் சில்லுக்குள் அகப்பட்டு ஒருவர் மரணமடைந்திருப்பது இதுவே முதன் முறையாகும் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் 28ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று தேரோட்டம் நடைபெற்று, நாளை தீர்த்த உட்சவத்துடன் மகோற்சவ திருவிழா நிறைவு பெற இருக்கின்றது.

இன்று நடைபெற்ற தேரோட்ட நிகழ்விலே இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தேரினை இழுப்பதற்கான வடத்தினை கன்னங்குடா மக்கள் கொண்டு வந்து ஆலயத்தில் ஒப்படைப்பதும் குறிப்பிடத்தக்கது.