மன்னார் பிரதான பாலத்தில் கோர விபத்து! தந்தை மகன் பலி

மன்னார் பிரதான பாலத்தில் கோர விபத்து! தந்தை மகன் பலி

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பிரதான பாலத்தில் இருந்து சுமார் 75 மீற்றர் தொலைவில் இன்று(9) வெள்ளிக்கிழமை மாலை 2.45 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தில் மன்னார் பகுதியைச் சேர்ந்த தந்தை வயது (50) மற்று மகன் வயது (11) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் அரச போக்குவரத்துச் சேவைக்கு சொந்தமான (என்.வி.8930) என்ற அரச பேரூந்து மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து பயணிகளுடன் இன்று (9) வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணியளவில் மன்னார் அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை தரிப்பிடத்தில் இருந்து வவுனியா நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

குறித்த பேரூந்து மன்னார் சாலையில் இருந்து பிரதான பாலம் ஊடாக சென்ற போது பிரதான பாலத்தில் இருந்து மன்னார் நோக்கி சுமார் 75 மீற்றர் தொலைவில் வந்து கொண்டிருந்த ரி.வி.ஸ். மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியுள்ளது.

இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த எஸ்.சத்தியதாஸ் ஜீவா (வயது-50) எனும் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி உயிரிழந்துள்ளார்.

அவரது மகனான எஸ்.சரோன் (வயது-11) என்பவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார். இவர்களது சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களுடன் குறித்த மோட்டார் சைக்கிளில் வருகை தந்த போது காயப்பட்ட எஸ்.ஜெரூஸ் வயது (9) என்ற சிறுவன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அப்புலன்ஸ் வண்டி மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார். குறித்த பேரூந்தின் சாரதியினை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் மன்னார் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மன்னார் சாலையில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற குறித்த பேரூந்து மன்னார் பிரதான பாலத்தில் இருந்து சுமார் 75 மீற்றர் தொலைவில் இரு சிறு பிள்ளைகளை ஏற்றி வந்த குடும்பஸ்தருடன் மோதியமை குறித்து மக்கள் அதிருப்தியினை தெரிவித்தள்ளனர்.

குறித்த இடத்திற்குள் அதி வேகமாக பேரூந்து பயணித்தமையினாலேயே இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக மன்னார் மக்கள் தெரிவித்துள்ளனர்.