முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட நட்டாங்கண்டல், எருவில், பனங்காமம் ஆகிய குளங்கள் நீர் வற்றி வரண்டு காணப்படுவதனால் இதன் கீழான நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட சிறிய நீர்ப்பாசனக்குளங்களை நட்டாங்கண்டல், எருவில், பனங்காமம் வீரப்பராயர் குளம் உழுவன்நரி, சிறாட்டிகுளம், பரப்புக்கால், இளமருதன்குளம் உள்ளிட்ட குளங்களில் தற்போதைய வறட்சியுடனான காலநிலை காரணமாக நீர்வற்றிக் காணப்படுகின்றது.
இவ்வாறு நிலவும் வறட்சி காரணமாக நீர்வற்றிய நிலையில் காணப்படுவதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
காலபோக பயிர்செய்கைகள் மேற்கொள்ளும் இக்குளங்களின் கீழ் கடந்த காலங்களில் கணிசமான அளவு சிறுபோக செய்கைள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவும் வரட்சி காரணமாக குளங்களில் நீர் இன்றிக் காணப்படுவதனால் சிறுபோக செய்கைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் மேற்படி குளங்களின் கீழான விவசாயக் குடும்பங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனைவிட, குளங்கள் நீர்வற்றிக் காணப்படுவதனால் குறிப்பிட்ட பிரதேசங்களில் உள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் குடிநீர் தேடி அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கூடுதலான கிணறுகளில் நீர் இன்றிக் காணப்படுவதனால், குடிநீருக்கான பற்றாக்குறை நிலவி வருவதாகவும், இவ்வாறு குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் மாந்தைகிழக்கு பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச சபையின் தவிசாளர் தயானந்தன் தெரிவித்துள்ளார்.
செய்திகள் 11.07.2019