யாழில் இலங்கையின் முன்னணி ஆடைத் தொழிற்சாலை நிறுவனம்!

யாழில் இலங்கையின் முன்னணி ஆடைத் தொழிற்சாலை நிறுவனம்!

இலங்கையிலுள்ள முன்னணி ஆடைத் தொழிற்சாலை ஒன்றினை யாழ் மாவட்டத்தில் நிறுவும் நடவடிக்கைகளில் இலங்கை முதலீட்டுச் சபையின் வடமாகாணக் காரியாலயம் ஈடுபட்டுள்ளதாக மேற்படி காரியாலயத்தின் சிரேஸ்டபிரதிப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஜெயமேனன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆடைத்தொழிற்சாலையில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்ற இளைஞர் யுவதிகள் தங்களது பிரதேச செயலகங்கள் மற்றும் முதலீட்டுச் சபையுடன் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாவட்டம் உள்ளிட்ட வடக்கு மாகாணம் முழுவதும் வேலையில்லாப் பிரச்சனை பாரிய பிரச்சனையாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில் இப் பிரச்சனையைக் குறைக்கும் வகையில் இங்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையிலேயே முன்னணியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றே யாழ் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்ப்டு வருகின்றது. இச் செயற்பாட்டில் முதலீட்டுச் சபையின் மாகாணக் காரியாலயமும் ஈடுபட்டிருக்கின்றது.

இதன் தொடர்ச்சியாகவே மேற்படி ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்வதற்கு ஆர்வமுள்ள ஆண் மற்றும் பெண் இரு பாலாரிடமிருந்தும் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றது. இதில் இளைஞர் யுவதிகள் தங்களின் கல்வித் தகைமை மற்றும் தர அனுபவங்களின் அடிப்படையில் பல்வேறு தரங்களிலான வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆகவே இங்கு வேலை வாய்ப்பற்றிருக்கின்ற இளைஞர் யுவதிகள் தற்போது கிடைத்திருக்கின்ற இந்த வாய்ப்பை உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டு தமக்கான வேலைகளைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.