யாழில் டெங்கு காய்ச்சலின் தாக்கம். இளம்பெண் இன்று மரணம்

 யாழில் கடந்த 20ம் திகதி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

சென் பற்றிக்ஸ் கல்லூரி வீதியைச் சேர்ந்த 26 வயதான ரி.கௌதினி என்ற இளம் பெண் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைகளுக்காக கடந்த 20ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் மாலை குறித்த இளம்பெண் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை யாழ்.குடாநாட்டில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தற்போது குறைந்துள்ளதாகவும், பருவமழை பெய்யாத நிலையில் நுளம்பு பெருக்கம் வெகுவாக குறைந்துள்ளதாகவும், யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சு ஆகியன சுட்டிக்காட்டியிருந்தது.

இதனையடுத்து, யாழ்.குடாநாட்டில் உச்சளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே குறித்த இளம் பெண் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.