யாழில். தாராளமாக விற்பனை செய்யப்படும் சின்னவெங்காயம்

யாழில். தாராளமாக விற்பனை செய்யப்படும்  சின்னவெங்காயம்

யாழ். மாவட்டத்தின் வெங்காய அறுவடை தற்சமயம் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதால் நாட்டின் பல பாகங்களிலும் சின்னவெங்காயம் தாராளமாகவும் சாதாரண விலையிலும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

கோப்பாய், சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு, இளவாலை போன்ற யாழ். மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வெங்காய அறுவடை இடம்பெற்றுள்ளது. யாழ். மாவட்டத்தில் இம்முறை 440 ஹெக்டேயரில் வெங்காய அறுவடை இடம்பெற்றுள்ளதாக விவசாயத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அறுவடை செய்யப்பட்ட யாழ்.வெங்காயம் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கும் கொண்டுவரப்பட்டு நாட்டின் பல பாகங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுவருகின்றன.

தனிமவுசு கொண்ட மக்களால் பெரிதும் விருப்பப்படும் யாழ். வெங்காயம் தற்சமயம் நியாய நிலையிலும் தாராளமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தனியார் வியாபாரிகள் வாகனங்களுடன் நேரில் சென்று யாழ்ப்பாணத்திலிருந்து வெங்காயத்தைக் கொள்வனவு செய்து வந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

முக்கிய நகரங்களிலும், பிரதான வீதிகளிலும் இவ்வாறு தனியே வெங்காயம் விற்பனை செய்வதில் பலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களால் ஒன்றரைக் கிலோ சின்னவெங்காயம் நூறு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் யாழ். மாவட்டத்தில் ஒரு கிலோ சின்னவெங்காயம் 50 ரூபா முதல் 60 ரூபா வரையும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 70 ரூபா விலையிலும் கொள்வனவு செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.