யாழில் பனங்கட்டியில் இரசாயனக் கலப்பு! ஆய்வில் அதிர்ச்சி

யாழில் பனங்கட்டியில் இரசாயனக் கலப்பு!  ஆய்வில் அதிர்ச்சி

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் பனை வெல்ல உற்பத்தி நிலையத்தில் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது பனை வெல்ல (பனங்கட்டி) உற்பத்திக்காக மனித பாவனைக்கு ஒவ்வாத விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் இரசாயனம் பயன்படுத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொதுச் சுகாதார பரிசோதகர் பாலச்சந்திரன் சஞ்சீவன் தலைமையிலான குழுவினர் நேற்று மதியம் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையிலேயே மேற்படி விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப் பரிசோதனையின் போது ஊர்காவற்றுறை பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினால் உற்பத்தி செய்யப்படும் “ISLAND PALM” ( ஜலண்ட் பாம் ) பனை வெல்ல உற்பத்தி நடவடிக்கைகளுக்கு விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் அடி உரம் (பொஸ்பேட்) பயன்படுத்தப்பட்டமையினை உறுதிப்படுத்தியுள்ளனர்.

விரைந்து செயற்பட்ட சுகாதாரப் பரிசோதகர் தலமையிலான குழுவினர் உற்பத்தி வெல்லங்கள் உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த 125 கிலோக்கிராம் நிறையுடைய பொஸ்பேட்டினை கைப்பற்றியுள்ளனர்.

இப் பொஸ்பேட்டினை பயன்படுத்தி உற்பத்தி செய்து விற்பனைக்காக தயாரான நிலையில் பொதிபிடப்பட்டிருந்த 250 கிராம் நிறை கொண்ட 40 பைக்கட்டுக்களையும் 114 கிலோக்கிராம் பனை வெல்லத்தினையும் பறிமுதல் செய்து திணைக்களத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் பனை வெல்லம் ஓர் மருத்துவப் பொருளாக பயன்படுத்தப்பட்டுவதுடன் அதிகமான நீரிழிவு நோயாளர்கள் தமது நோய்க்கான நிவாரணியாக நம்பிப் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் தென்னிலங்கை மக்கள் விரும்பி கொள்வனவு செய்யும் இப்பனை வெல்ல உற்பத்திகளில் இவ்வாறான இரசாயனக் கலவை கலக்கப்பட்டமை பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக சுகாதார பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களுடன் நாளை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.