யாழில் பனை மர அழிப்பால் பனைசார் உணவுகளுக்கு தட்டுப்பாடு

யாழில் பனை மர அழிப்பால்  பனைசார் உணவுகளுக்கு தட்டுப்பாடு
யாழ்ப்பாணத்தில் பனைசார் உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 
யாழ்ப்பாணத்தில் பனைசார் உணவுகளான பனங்கிழங்கு, ஒடியல் மற்றும் புளுக்கொடியலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 
 
பாடசாலை , வருட மற்றும் நத்தார் விடுமுறைகள் தற்போது விடப்பட்டுள்ளநிலையில் தென்பகுதியிலிருந்தும்,வெளிநாட்டிலிருந்தும்  அதிகமானவர்கள் வருகை தருகின்றனர்.
 
யாழ்ப்பாணத்தில் சிறப்பான உணவுவகைகளில் பனை சார் உணவுப்பொருட்கள் மிகவும் பாரம்பரிய உணவாக உள்ளன. 
 
 
அத்துடன் யாழ்ப்பாணத்திற்கு வரும் சுற்றுலாத்துறையினரும் உள்ளூரில் உள்ளவர்களும் விருப்பமாகவும் தேடிபெற்றுக் கொள்ளும் உணவு பனை உற்பத்தி உணவுகளே.எனினும் அவற்றுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 
 
இதனால் அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக வியாபாரிகளும் கொள்வனவாளர்களும் கவலை வெளியிட்டுள்ளனர். 
 
இது தொடர்பில் பனை அபிவிருத்திச் சபையின் தலைவரிடம்   கேட்டபோது,
 
முன்னர் ஒரு காலத்தில் பனை வளம் யாழ்ப்பாணத்தில் பல்கிப்பெருகிக் காணப்பட்டது. அதன்போது அதிகமான உற்பத்தியினைப் பெற்றுக் கொள்ள முடிந்தது.
 
நம்மவர்களும் உணவுக்கு பனை உற்பத்திப் பொருட்களை அதிகளவில் சேர்த்துக் கொண்டு நோய் நொடிகளின்றி பல ஆண்டுகள் திடகாத்திரமாக வாழ்ந்துவந்தனர்.
 
எனினும் கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தத்தினால் பனை வளங்கள் அழிக்கப்பட்டதுடன் பல்வேறு தேவைகளுக்கும் அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த செயற்பாடு தற்போதும் நிறுத்தப்படவில்லை.  தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. இதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பும் குறைவாகவுள்ளது. 
 
இவ்வாறான நடவடிக்கையால் பனை மரங்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு குறைவடைந்துள்ளது. இதனால்  யாழ். மாவட்டத்தில் கடந்த ஆண்டும் இவ்வாண்டும் பனம் விதையில் வீழ்ச்சி ஏற்பட்டு உற்பத்தியும் குறைவடைந்துள்ளது. 
 
தற்போது ஒடியல் கிலோ ஒன்று 350 ரூபாவிற்கு அதிகமாகவும்  புளுக்கொடியல் 400 ரூபாவிற்கு அதிகமாகவும் சீவிய புளுக்கொடியல் 600 ரூபாவிற்கும் விற்கப்பட்டு வருகின்றது. 
 
தற்போது பனை அபிவிருத்திச் சபையின்  கொள்வனவு மற்றும் விற்பனையை விட தனியார்துறையின் விற்பனையும் கொள்வனவுமே அதிகரித்துள்ளது. 
 
எனவே தொடர்ந்தும் பனை மரத்தினை அழித்து வந்தால் பனம் உணவுப்பொருட்களின் விலை எதிர்காலத்தில் மேலும் பலமடங்கிற்கு அதிகரிக்கும் .
 
எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய வளம் மற்றும் பொருளாதாரத்தைக் கருத்திற் கொண்டு பனை மரங்களை அழிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.