யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பெய்த மீன் மழை

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை பெய்த மழையுடன் மீன்களும் விழுந்துள்ளன.

 

குடாநாட்டில் பரவலாக பருவமழை பெய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக வண்ணை வீரமாகாளி அம்மன் ஆலயப் பகுதியில் மீன் மழை பெய்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீரமாகாளி அம்மன் கோயில் பகுதியில் பெய்த மழையின்போது 30 தொடக்கும் 40 வரையான மீன்கள் மழையுடன் விழுந்துள்ளன. கறுப்பு நிறத்தில் இருந்த சிறிய மீன்களை பார்வையிட அப்பகுதியில் மக்கள் திரண்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக நேரில் கண்டவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் - அதிகாலைவேளை ஆலயத்தின் பிரதம குரு அருகில் இருந்த தனது வீட்டில் இருந்து ஆலயத்தை நோக்கிச் சென்றுள்ளார்.

இதன் போது ஆலயத்தின் முன்பகுதியில் சில மீன்கள் துடித்துக் கொண்டு இருப்பதை அவதானித்துள்ளார். இதன் பின்னர் அயலில் உள்ளவர்களை அழைத்துக் கொண்டு அப்பகுதியை முழுமையான அவதானித்துள்ளார்.

இதன் போது அப்பகுதியில் உள்ள தேர் முட்டியடியில் தேங்கி நின்ற மழை வெள்ளத்தில் ஏராளமான மீன்கள் காணப்பட்டதை அவதானித்துள்ளனர். அதே போன்று ஆலயத்தின் முன்பகுதியிலும் அதிகளவான மீன்கள் துடித்துக்கொண்டு இருந்துள்ளன.

மழையுடன் சேர்ந்து மீன் விழுந்த சம்பவம் தொடர்பாக கதை தெரிந்த பலர் அங்கு வந்து மீன்களை பார்வையிட்டுச் சென்றிருந்தனர்.

இதன் பின்னர் அங்கிருந்த சில மீன்கள் பொது மக்களால் பிடித்துச் செல்லப்பட்டதுடன், பறவைகளும் தூக்கிச் சென்றுள்ளன என்று தெரிவித்திருந்தனர்.